Last Updated:
சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த நாளில், பிரதமர் மோடி குஜராத்தில் சிலைக்கு மரியாதை செலுத்தி, ஒற்றுமை தின விழாவில் உறுதி மொழி எடுத்தார்.
நாட்டின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150 ஆவது பிறந்தநாளை ஒட்டி குஜராத்தில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் முதல் துணை பிரதமரான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் ஆண்டுத்தோறும் தேசிய ஒற்றுமைத் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், குஜராத்தின் நர்மதா மாவட்டம் ஏக்தா நகரில் அமைந்துள்ள 182 மீட்டர் உயர படேல் சிலைக்கு அவரது 150 ஆவது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்தும் சிலை மீது மலர் தூவப்பட்டது.
இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் ஒற்றுமைக்கான உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதனையடுத்து, புதுச்சேரி, குஜராத், மகாராஷ்ட்ரா, சத்தீஸ்கர், உத்தராகண்ட், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேதங்களில் இருந்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருப்பொருள் அடிப்படையில்,கண்கவர் ஊர்திகள் அணிவகுத்து சென்றன.
மேலும், தேசிய பாதுகாப்பு படையின் கம்பீர அணிவகுப்பு, அசாம் காவல்துறையின் மோட்டார் சைக்கிள் சாகசம் அரங்கேற்றப்பட்டது. இந்திய விமானப்படையை சேர்ந்த சூர்ய கிரண் அணியின் வான் சாகசம், பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது. குஜராத் காவல்துறையினர் குதிரைப்படை, எல்லைப்பாதுகாப்பு படையினரின் ஒட்டகங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது. மேலும், எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த நாட்டு நாய்களின் திறன்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், ஒற்றுமை தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாக சாடினார். சர்தார் படேலின் கொள்கைகளை மறந்து காங்கிரஸ் சுயநலத்துடன் செயல்பட்டதாக குற்றம்சாட்டினார். வந்தே மாதரம் பாடலின் முழு தொகுப்பை காங்கிரஸ் அப்போது ஏற்றுக் கொண்டு இருந்தால், நாட்டின் முகமே தற்போது வேறு மாதிரி இருந்திருக்கும் என மோடி குறிப்பிட்டார்.
October 31, 2025 12:22 PM IST


