நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மாத்திரையின் விலை இன்னும் சில நாட்களில் 90 சததவீதம் வரை குறைய உள்ளது. அதாவது ரூ.60-க்கு விற்கப்படும் ஒரு மாத்திரையின் விலை ரூ.6 வரை குறைய உள்ளது. இது, கோடிக்கணக்கான மக்களின் செலவை குறைத்து நிதி அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் என்பதுடன் நீரிழிவு நோய் பாதித்த அனைவரும் அதனை வாங்கி பயன்படுத்த ஏதுவாக அமையும்.
நீரிழிவு, இதய செயலிழப்பு மற்றும் அவை தொடர்பான கூட்டு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் முக்கிய மருந்தாக எம்பாக்லிப்ளோசின் உள்ளது. இதன் காப்புரிமை ஜெர்மனியைச் சேர்ந்த போஹ்ரிங்கர் இங்கல்ஹெய்ம் நிறுவனத்திடம் இதுவரை இருந்தது. இந்த நிலையில், இந்த மருந்துக்கான அந்நிறுவனத்தின் காப்புரிமை காலம் இன்றுடன் (மார்ச் 11) காலாவதியாக உள்ளது. இதையடுத்து, மலிவு விலையிலான ஜெனரிக் மருந்துகள் இன்னும் சில நாட்களில் சந்தைக்கு வரும் என மருந்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மருந்தை தயாரித்து வெளியிடுவதில் மேன்கைண்ட் பார்மா, டோரண்ட், ஆல்கெம், டாக்டர் ரெட்டீஸ் மற்றும் லூபின் நிறுவனங்கள் மிக ஆர்வமாக உள்ளன.
சந்தைப் பங்களிப்பில் இந்தியாவின் நான்காவது பெரிய நிறுவனமாக மேன்கைண்ட் பார்மா உள்ளது. இந்த நிறுவனம், நீரிழிவு நோய் சிகிச்சைக்கான எம்பாக்லிப்ளோசின் மருந்தின் விலையை 10-ல் ஒருபங்காக குறைத்து சந்தையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது, தற்போது ரூ.60-க்கு விற்கப்படும் ஒரு மாத்திரையின் விலையை ரூ.6-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
10 கோடி பேருக்கு சர்க்கரை வியாதி: இந்தியாவில் 10.1 கோடி பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச டயாபட்டீஸ் பெடரேஷன் தெரிவித்துள்ளது. இது இந்திய பொது சுகாதாரத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டில் நீரிழிவு நோய்க்கான சந்தை என்பது ரூ.14,000 கோடியாக இருந்தது. இது, தற்போது 43 சதவீதம் அதிகரித்து ரூ.20,000 கோடியை தொட்டுள்ளது. இந்தநிலையில், நீரிழிவு நோய்க்கான மாத்திரையின் விலை ரூ.9-14 குறையும்பட்சத்தில் அது இந்த சந்தையின் வளர்ச்சி விகிதத்தை கணிசமாக குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.