Last Updated:
சரியான நேரம் வரும் போது கூட்டணி அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அறிவிப்போம் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். ஆங்கில செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சரியான நேரம் வரும் போது கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாததால் இளைஞர்கள் வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வருவதாகவும்,
முன்னணி மாநிலமாக இருந்த தமிழ்நாடு திமுக அரசின் கொள்கைகளால் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் திமுகவை ஆட்சியில் இருந்து மக்கள் அகற்றுவர் என தான் நம்புவதாகவும் கூறினார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலின் மூலம் தென் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் எனவும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிய நிலையில், கூட்டணி பேச்சு நடப்பதாக அமித் ஷா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இது அமித் ஷாவின் சொந்த கருத்து என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்திக்க வில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரையில் இருந்து ரகசியமாக செங்கோட்டையன் டெல்லி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையின் சந்தித்து விட்டு திரும்பி உள்ளதாக கூறப்படும் நிலையில், இது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தற்செயலாக சந்திப்பு நடந்திருக்கும் என்று கூறினார். உள்நோக்கத்துடன் மத்திய அமைச்சர்களை செங்கோட்டையன் சந்தித்திருக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.
March 30, 2025 6:41 AM IST


