கோலாலம்பூர்:
காற்றுத் தரம் சற்று மேம்பட்டதை அடுத்து, செரியான் பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவர மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம், சரவாக் பிரதமர் அபங் ஜோகாரி துன் ஒபேங் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அங்கு காற்றின் தரம் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் செரியான் மற்றும் சமரகான் பகுதிகளில் இன்னும் புகைமூட்டம் முழுமையாக விலகவில்லை என்பதால், காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையிலேயே உள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசு நிலை இன்னும் ஆரோக்கியமற்ற நிலையிலேயே தொடர்வதாக ஏபிஐஎம்எஸ் (APIMS) தரவுகள் தெரிவிக்கின்றன.



