EMI-களில் மூழ்கும் இந்திய நடுத்தர குடும்பங்கள், எதிர்கால நிதி பாதுகாப்பை இழக்கின்றன. வீடு, வாகனம், கிரெடிட் கார்டு செலவுகள் என இவை அனைத்துக்கும் சம்பளத்தின் பெரும்பகுதி செலவாகி விடுவதால், சேமிப்பும், முதலீடும் இல்லாமல் போவதாக நிதி ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
2024 இறுதியில், வீட்டு கடன்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 42%ஆக உயர்ந்துள்ளன. இது நம் அனைவரையும் உலுக்கக்கூடிய அளவிலான எண்ணிக்கை என்று மூத்த நிதி ஆய்வாளர் சுஜய் யு எச்சரிக்கிறார்.
பெர்ஃபியோஸ் மற்றும் PwC நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, இந்திய நடுத்தர வர்க்கம் கடனில் மூழ்கி வருகிறது. வாடகை, மளிகைச் செலவுகள், சேமிப்பு என அனைத்தையும் கணக்கில் எடுப்பதற்கு முன்பாக, மாத சம்பளத்தில் 33% வரை மூலதனத் தொகை மற்றும் வட்டித் தொகையாக EMI-களுக்குச் செலவாகி வருகிறது. மேலும், அதிக வருமானம் பெறுபவர்களும் இதில் விலக்காக இல்லை. மாறாக, அவர்களுடைய வருமானத்தில் 45% வரை கடனுக்காக செலவு செய்கின்றனர்.
இந்தக் கடன்களில் வீடு, வாகனம், கிரெடிட் கார்டுகள், BNPL (Buy Now Pay Later) திட்டங்கள் என அனைத்தும் அடங்கும். இவ்வாறாக, EMI-கள் இப்போது இந்தியர்களின் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டன. ஆனால், இது ஆழமான நிதி பாதுகாப்பு குறித்த எச்சரிக்கையையும் எழுப்புகிறது.
மும்பை போன்ற நகரங்களில், வீட்டுக் கடனுக்கே பாதி சம்பளம் செலவாகிறது. எனவே, அவசர தேவைகளுக்கான சேமிப்போ, நீண்ட கால முதலீடுகளையோ உருவாக்குவது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகி இருக்கிறது. இந்தியாவின் தேசிய சேமிப்பு விகிதம் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3% எனவும், இது கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில் எடுத்த கடன்கள், இப்போது அவர்களின் நிதி சுதந்திரத்தை மெல்ல நசுக்கி வருகின்றன. சம்பளத்தில் மூன்றில் ஒன்று வட்டிக்குப் போக, சேமிப்பும், முதலீடும் காணாமல் போகின்றன. இது வெறும் வாழ்க்கை முறை மாற்றம் மட்டுமல்ல, நிதி ஆபத்துக்கு விடுக்கப்படும் பெரிய எச்சரிக்கையாகும்.
வேலை இழப்பு, சுகாதாரச் செலவுகள் அல்லது பொருளாதார மந்தநிலை போன்ற எந்தவொரு எதிர்பாராத நெருக்கடியும், EMI-ஐ கட்ட முடியாத அளவுக்கு அபாயத்தைக் கொண்டுள்ளது. இது நடுத்தர வர்க்க குடும்பங்களைப் பொருளாதார ரீதியாக கடுமையாக திணற வைக்கும். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அண்மை அறிக்கைகள், குறிப்பாக பாதுகாப்பற்ற மற்றும் நுண் நிதி கடன்களில் கடன் மீறல்கள் கணிசமாக அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது.
மூத்த நிதி ஆய்வாளர் சுஜய் யு இதை ஒரு கலாச்சார மாற்றமாகப் பார்க்கிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “EMI-ஐ அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறை உடனடி திருப்தியும், ஆடம்பரங்களும் நிறைந்தது போலத் தோன்றலாம். ஆனால், அது கடனில் இயங்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அது நிதி சுதந்திரத்தைப் போக்கக்கூடியது” என்றார்.
July 07, 2025 9:49 PM IST
சம்பளத்தில் 33% EMI… இந்திய நடுத்தர குடும்பங்களை நசுக்கும் கடன்கள்…! எச்சரிக்கும் நிதி ஆய்வாளர்…