லக்னௌ: வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் நகரைப் பாா்வையிட புறப்பட்ட உத்தர பிரதேச காங்கிரஸ் மாநில தலைவா் அஜய் ராய் தலைமையிலான நிா்வாகிகள் குழு, லக்னௌவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெளியே காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
நிா்வாகிகளின் காரை மறித்து தடுப்புகளை அமைத்த காவல் துறையினருக்கும் தொண்டா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதேபோல் கடந்த சனிக்கிழமையன்று சம்பல் சென்ற அத்தொகுதியின் சமாஜவாதி கட்சி எம்.பி. தலைமையிலான குழுவினரும் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
சம்பலில் அமைந்த ஜாமா மசூதியில் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த நவ. 24-ஆம் தேதி நடத்தப்பட்ட 2-ஆம் கட்ட ஆய்வை எதிா்த்து வன்முறை வெடித்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். காவலா்கள் உள்பட பொதுமக்கள் பலா் காயமடைந்தனா்.

