சமையல் எரிவாயு உடன் ஹைட்ரஜென் கலக்க முடிவு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!
மத்திய அரசு எரிபொருள் தொடர்பான இறக்குமதி செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதில் குறியாய் இருக்கும் வேளையில் இதற்கான மாற்றுத் திட்டங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
உதாரணமாக பெட்ரோலில் எத்தனால் கலப்பது போல் தற்போது சமையல் எரிவாயுவில் ஹைட்ரஜென் கலப்பது குறித்து மத்திய அரசு கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்து வந்த நிலையில், இன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கட்டுப்பாட்டு அமைப்பு பைப்லைன் மூலம் செலுத்தப்படும் இயற்கை எரிவாயு – PNG உடன் 5 சதவீதம் ஹைட்ரஜென் வாயுவைக் கலப்பதற்கான வழிமுறையை வெளியிட்டு உள்ளது.

ஹைட்ரஜென் கலப்பு மூலம் இயற்கை எரிவாயு இறக்குமதி சார்பில் இருந்து சிறிய அளவில் நிவாரணம் கிடைக்கும். ஆனால் இயற்கை எரிவாயு உடன் ஹைட்ரஜென் கலந்தால் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய தற்போதைய பைப்லைன் நெட்வொர்கில் முக்கிய மாற்றங்கள் அல்லது மேம்பாடுகள் தேவை என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் தற்போது பைப்லைன் மூலம் சமையில் எரிவாயு சப்ளை செய்யும் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட், மாகநகர் கேஸ் லிமிடெட், கெயில் ஆகியவை தனது பைல்லைனில் கூடுதல் முதலீட்டைச் செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதேபோல் கேஸ் விநியோகத்தில் கண்காணிப்பு முறையையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயமும் இந்த கலப்பில் அவசியமாகிறது.
இதன் மூலம் பிஎன்ஜி இணைப்பு பெற்றுள்ள அனைத்து வாடிக்கையாளரும் கலக்கப்பட்ட எரிவாயு பெறுவதில் தாமதம் ஏற்படலாம். இதேபோல் ஹைட்ரஜென் கலக்கப்பட்ட எரிவாயு என்பது தற்போதைய இயற்கை எரிவாயு விடவும் அதிக விலை கொண்டது என்பதால் கூடுதல் செலவுகளை வாடிக்கையாளர்கள் பில் தொகையில் விதிக்க வாய்ப்புள்ளது.
ஏற்கனவே சிட்டி கேஸ் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனங்கள் வளைகுடா போர் காரணமாக இயற்கை எரிவாயு விலையில் பெரும் மாற்றத்தை எதிர்கொண்டு வரும் வேளையில் இப்புதிய கலப்பு விகிதம் மூலம் கூடுதல் விலை சுமை உருவாகியுள்ளது.
இதனால் இக்கலப்பு முறையை இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட், மாகநகர் கேஸ் லிமிடெட், கெயில் ஆகியவை நடைமுறைப்படுத்துமா என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.
தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கிரீன் ஹைட்ரஜென் விலையை அரசின் டென்டர் வழியாக நிர்ணயம் செய்யப்பட்டு வரும் வேளையில் ஒரு கிலோ 387 – 397 ரூபாய் விலையில் விற்கப்பட்டு வருகிறது.
