உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS), குடியேற்ற சலுகைகளைக் கருத்தில் கொள்கையில், சமூக ஊடகங்களில் யூத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் யூத நபர்களை குறிவைத்து நடத்தப்படும் உடல்ரீதியான துன்புறுத்தல் சம்பவங்களை காரணியாகக் கொள்வோம் எனக் கூறியுள்ளது.
அதன்படி, ஹமாஸ், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஏமனில் உள்ள ஹவுத்திகள் போன்ற அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்புகளாக வகைப்படுத்தப்பட்ட குழுக்களை ஆதரிக்கும் பதிவுகள் யூத எதிர்ப்பு உள்ளடக்கமாகக் கருதப்பட்டு விண்ணப்பச் செயல்பாட்டின்போது எதிர்மறையான காரணியாகக் கருதப்படும். இந்தக் கொள்கை உடனடியாக அமலுக்கு வரும் என்றும், மாணவர் விசா விண்ணப்பங்களுக்கும் நிரந்தர குடியுரிமை அட்டை (கிரீன் கார்டு) கோரிக்கைகளுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஒரு விண்ணப்பதாரர் யூத எதிர்ப்பு பயங்கரவாதம், அமைப்புகள் அல்லது செயல்களை ஆதரித்தாரா அல்லது ஊக்குவித்தாரா என்பதை USCIS மதிப்பீடு செய்யும். மேலும், அத்தகைய நடத்தை குடியேற்ற சலுகைகள் மறுக்கப்படுவதற்கு வழிவகுக்கும்” என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு அமெரிக்காவில் “இடமில்லை” என்று பொது விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டிரிசியா மெக்லாஃப்லின் கூறினார். “அவர்களை இங்கே அனுமதிக்கவோ அல்லது தங்க அனுமதிக்கவோ எங்களுக்கு எந்தக் கடமையும் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
“அமெரிக்காவிற்கு வந்து, அரசியலமைப்பின் முதல் திருத்தத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு, யூத எதிர்ப்பு வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிக்க முடியும் என்று நினைக்கும் எவரும் வரவேற்கப்படுவதில்லை” என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: முற்றும் அமெரிக்கா-சீனா வரி யுத்தம்.. மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!
டிரம்ப் நிர்வாகத்தின் உறுதியான அணுகுமுறை
ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, கல்லூரி வளாக போராட்டங்கள் மற்றும் யூத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான குடியேற்றம் குறித்து அவரது நிர்வாகம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பல வெளிநாட்டு மாணவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஏராளமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அரசு நிதி அளிப்பு குறையக்கூடும் என்று பல்கலைக்கழகங்கள் எச்சரித்துள்ளன.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த மாதம் 300-க்கும் மேற்பட்ட நபர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த செயல்முறை தினமும் தொடர்வதாகவும், “இந்த பைத்தியக்காரர்களில் ஒருவரை நான் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு முறையும், அவர்களின் விசாக்களை ரத்து செய்வேன்” என்று கூறுகிறார்.
இதையும் படிக்க: உலகில் மிகவும் பிஸியான டாப் 10 விமான நிலையங்கள்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
இது தொடர்பாக மிக முக்கியமான வழக்குகளில் ஒன்று, கடந்த ஆண்டு நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய பாலஸ்தீன சார்பு ஆர்வலரான மஹ்மூத் கலீல் தொடர்பானது. சிரியாவைச் சேர்ந்தவரும், அல்ஜீரியா நாட்டின் குடிமகனுமான கலீல், 2022ல் மாணவர் விசாவில் அமெரிக்காவிற்குள் நுழைந்து 2024-ல் நிரந்தர குடியிருப்பிற்கு விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
April 13, 2025 5:43 PM IST
சமூக ஊடகங்களில் இதைச் செய்தால் விசா, குடியிருப்பு அனுமதி கிடையாது…! அமெரிக்கா அதிரடி அறிவிப்பு…

