கோத்தா கினபாலு, பிப்ரவரி 24, 2026:
சபா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் உள்ள 32 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 5,017 ஆக நீடிக்கிறது.
இங்கு மொத்தம் 86 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பித்தாஸ் (Pitas): 2,701 பேர், பைத்தான் (Paitan): 2,071 பேர், தாவாவ் (Tawau): 245 பேர் என்ற அடிப்படையில் பதிவாகியுள்ளது, மேலும் நேற்றிரவு நிலவரப்படி இருந்த அதே எண்ணிக்கையே இன்றும் நீடிப்பதாக ,சபா மாநில பேரிடர் மேலாண்மைச் செயலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, சபாவின் உட்புறப் பகுதிகளில் இன்று காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளும், நிலைமையைக் கண்காணிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




