Last Updated:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவுக்கு எதிர்ப்பு மனுக்களுக்கு மத்திய அரசு ஆதரவு, 9 நீதிபதிகள் அமர்வு ஏப்ரல் 7 முதல் விசாரணை, சூர்யகாந்த் தலைமையில் நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 67 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதனை 2019-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக விசாரணை தள்ளிப்போனது. அந்த அமர்வில் இருந்து 8 நீதிபதிகள் ஓய்வுபெற்று தற்போதைய தலைமை நீதிபதி சூர்யகாந்த் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் அமர்வு காவாவதியானது.
இந்நிலையில், இந்த வழக்கு வெகுநாட்களுக்குப் பின் உயிர்பெற்றுள்ளது. இந்த வழக்கை, 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஏப்ரல் 7ஆம் தேதி முதல் விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 22-க்குள் முடிக்கப்படும் என்றும் அமர்வு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற சீராய்வு மனுவை தாங்கள் ஆதரிப்பதாக தெரிவித்தார். இந்த 9 நீதிபதிகள் அமர்வு, மத சுதந்திரம் மீறப்படுகிறதா, குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் மற்றொரு மத விவகாரத்தில் தலையிடலாமா என்பன உள்ளிட்ட 7 அம்சங்கள் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்கக் கூடாது..” உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஆதரவு!


