சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்டத்தில் தெலங்கானா எல்லையை ஒட்டிய அடா்ந்த வனப் பகுதியில் சனிக்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா், அங்கு பதுங்கியிருந்த 3 நக்ஸல் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனா்.
அப்பகுதியிலிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருள்களை பாதுகாப்புப்படையினா் கைப்பற்றினா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பிஜாபூா் மாவட்டம் உசூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட டோலிகுடா கிராமத்துக்கு அருகே அடா்ந்த வனப் பகுதியில் சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்ஸல் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா். தாக்குதலுக்குப் பிறகு அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, 3 நக்ஸல்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அந்த இடத்திலிருந்து ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. அந்தப் பகுதியில் தேடுதல் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்றனா்.
முன்னதாக, இதே மாவட்டத்தில் கங்காலூா் காவல் நிலைய பகுதிக்கு உள்பட்ட லெந்த்ரா கிராமத்தை ஒட்டிய வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 13 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.