Last Updated:
விபத்து காரணமாக பிலாஸ்பூர் – ஹவுரா வழித் தடத்தில் செல்லும் ரயில்களின் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை சுமார் 4 மணியளவில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்கொண்டு காயம் அடைந்தவர்களுக்கு விரைவான சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகளை செய்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் ரயில்வேயின் மருத்துவக்குழுவும் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. விபத்து காரணமாக பிலாஸ்பூர் – ஹவுரா வழித் தடத்தில் செல்லும் ரயில்களின் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து ஏற்பட்டபோது மேலே செல்லும் மின்சார வயர்களில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்தால் மட்டுமே போக்குவரத்து சீரடையும் என்பதால் நிலைமை சீரடைய கூடுதல் நேரம் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 20க்கும் அதிகமானோர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சமும், காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல்களை அறிய பின்வரும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு-
Bilaspur: 7777857335, 7869953330
Champa: 8085956528
Raigarh: 9752485600
Pendra Road: 8294730162
Korba: 7869953330
Usalapur: 7777857338
November 04, 2025 6:34 PM IST
சத்தீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து.. 6 பயணிகள் உயிரிழப்பு.. 20-க்கும் மேற்பட்டோர் காயம்


