புரட்சிக்குப் பின்னர் மாறிய ஈரானிய அரசியல் கண்ணோட்டம்!
ஆனால் 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அயோதுல்லா கொமேனியின் தலைமையில் இஸ்லாமியக் குடியரசாக ஈரான் மாறிய பின்னர், புதிய அரசு பிராந்திய அரசியலில் மேலும் கவனம் செலுத்தத் தொடங்கியது,
சுன்னி – ஷியா பிளவுகள் மிகுந்த மத்தியக் கிழக்கு அரசியலில் தன்னை ஒரு ஷியா முஸ்லீம்களின் பாதுகாவலனாகக் கருதிய ஈரானின் புதிய அரசின் அணுகுமுறையில் மாற்றங்கள் தோன்றத்தொடங்கின.
ஷியாக்கள் கணிசமாக இருந்தாலும், சுன்னி பிரிவினர் நிறைந்த பாத் கட்சியின் ஆட்சி அண்டை நாடான ஈராக்கில் நிலவிய காலத்தில், அந்நாட்டு அதிபர் சதாம் ஹுசேன், ஈரானின் புதிய அரசின் நோக்கங்கள் குறித்து சந்தேகப்பட்டார். தனது மதப் புரட்சி அரசியலை ஈரான் மத்தியக் கிழக்கின் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நினைக்கிறதோ என்பது அவரது சந்தேகம் மட்டுமல்ல, பிற சுன்னி அரசுகளின் சந்தேகமும் கூட.
இஸ்லாமியக் குடியரசாக 1979ல் உதித்த ஈரான் அரசுடன் அவர் 1980ல் தொடங்கிய போர் 8 ஆண்டுகள் வரை நீடித்து இரு தரப்புகளுக்கும் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படுத்தி, யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாத நிலையில் முடிந்தது.

புதிய அரசியல் தோற்றுவித்த புதிய எதிரிகள்!
இந்தப் போருக்குப் பின்னர் ஈரானின் தலைவர் அயோதுல்லா கோமெனி இறக்க, அவருக்குப் பின் அந்த அதி உயர் தலைவர் பதவிக்கு வந்த அயோதுல்லா கமெனெய் ஈரானின் வெளியுறவு கொள்கையை இன்னும் விசாலமாக்கி மத்தியக் கிழக்கு முழுவதும் ஈரானின் செல்வாக்கை பெருக்க பல நடவடிக்கைகளை எடுத்தார்.
இந்த நடவடிக்கைகளால் உதித்த ( நாம் ஏற்கனவே பார்த்த) “எதிர்ப்பு நாடுகளின் அச்சாணி” ( Axis of Resistance) போன்ற நகர்வுகள் ஈரானை ஒரு பக்கம் பிராந்திய ரீதியில் வளரும் சக்தியாக உருவாக்கினாலும் அதே அளவு அதற்கு பிராந்திய அளவில் எதிரிகளையும் தோற்றுவித்தன.
ஈரான் தனது பாணி இஸ்லாமியப் புரட்சியை மத்தியக் கிழக்கின் மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யத் திட்டமிடுவதாக பிற இஸ்லாமிய நாடுகள் , குறிப்பாக சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், போன்றவை நினைத்தன.
இஸ்ரேலோ, தன்னை அழித்தொழிக்க வெளிப்படையாக அறிவித்த ஈரானை பரம வைரியாகப் பார்க்கத் தொடங்கியதுடன், அதன் அணு சக்தித் திட்டம் குறித்தும் அச்சம் கொண்டது .
அமெரிக்க உதவியுடன் தொடங்கிய ஈரானின் அணு சக்தித் திட்டம், ஈரான் இஸ்லாமியக் குடியரசான பின்னர் அதன் மத ரீதியான சித்தாந்தத்தின் மற்றும் தேசியவாதத்தின் ஒரு பெருமைமிகு குறியீடாக மாறத் தொடங்கியது. இது அண்டை நாடுகளையும் , இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவையும் கவலை கொள்ள வைத்தது.

