
1969-ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் வழிநடத்திய INCOSPAR எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி குழு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக மாறியது. 1975-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான “ஆர்யபட்டா” சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது. அதன்பிறகு, எஸ்.எல்.வி (SLV), ஏ.எஸ்.எல்.வி (ASLV), பி.எஸ்.எல்.வி. (PSLV), ஜி.எஸ்.எல்.வி. (GSLV), எல்.வி.எம்.-3 (LMV-3), எஸ்.எஸ்.எல்.வி. (SSLV) என இந்தியாவின் பல்வேறு கனவுத்திட்டங்களை சுமந்து கொண்டு இந்த ராக்கெட்கள் விண்ணில் சீறிப்பாய்ந்தன.
குறிப்பாக, நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்கள், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் மங்கள்யான், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 உள்ளிட்ட விண்கலன்கள் உலகின் பார்வையை இஸ்ரோ பக்கம் திருப்பியது. இவைமட்டுமின்றி, வணிக ரீதியாகவும் பல்வேறு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது. இந்நிலையில், நாளை காலை தனது 100-ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எஃப்-15 மூலம், என்விஎஸ்-2 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
இந்தியாவில் தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்திற்கு உதவும் வகையில், IRNSS எனப்படும் இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டது. முதற்கட்டமாக, கடந்த 2013 முதல் 2018 வரை, 8 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதன் விளைவாக, இந்தியாவிற்கான பிரத்யேக வழிகாட்டியான நாவிக் (NAVIC) தொழில்நுட்பம் செயல்பாட்டிற்கு வந்தது. நாட்டின் கண்காணிப்பு பணிகள் அதன் வாயிலாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
இதனை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2023 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி என்.வி.எஸ்.-1 செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதன் அடுத்த பாய்ச்சலாக, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய என்விஎஸ்-2 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இரண்டாயிரத்து 250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். எல் 1, எல் 5, எஸ் பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணுக்கடிகாரம் உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
எஸ்.பி.எஸ், மற்றும் ஆர்.எஸ். எனப்படும் இரண்டு வகையான சேவைகளை வழங்க உள்ள நேவிக் 2 தொழில்நுட்பம், உள்நாடு மட்டுமின்றி, இந்திய நிலப்பரப்பில் இருந்து ஆயிரத்து 500 கிலோ மீட்டர் வெளியிலும் வழிகாட்டும் என இஸ்ரோ கூறியுள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை காலை 6.23 மணிக்கு, இஸ்ரோவின் 100 ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி.எஃப்-15 மூலம் இத்தகைய சிறப்பு வாய்ந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
January 28, 2025 10:51 AM IST

