Last Updated:
India Pakistan War | இரு நாடுகளும் மோதலை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, தாக்குதல் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட நிலையில் இந்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து, இந்தியாவில் காஷ்மீர் மற்றும் பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை தொடுத்தது.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டதால் எல்லையில் பதற்றம் நிலவியது. இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் பயனாக இரு நாடுகளும் மோதலை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, தாக்குதல் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சண்டையை நிறுத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறினார். அதன்படி, சனிக்கிழமை மாலை 5 மணியுடன் மோதல் நிறுத்தப்பட்டதாகவும், அடுத்த கட்டமாக வருகின்ற 12 ஆம் தேதி இரு நாட்டு ராணுவ உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மோதலை நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தாரும் தெரிவித்துள்ளார். அதேவேளையில், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா உறுதியாக நின்றது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன், தீவிரவாதத்துக்கு எதிராக சமரசம் இல்லாத இந்தியாவின் நிலை தொடரும் எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையே இந்திய வெளியுறவுத் துறை போர் நிறுத்தம் தொடர்பாக வெளியிட்ட தகவலில், “தீவிரவாதிகளுக்கு எதிரான செயல்பாடுகள் தொடரும்; போர் நிறுத்தத்துக்கு முன்பும் பின்பும் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. இருநாடுகளுக்கும் இடையேயான மோதலை நிறுத்துவதற்கான புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. எனினும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது தொடரும்” என்று அறிவித்துள்ளது.
போர் நிறுத்தத்தை அடுத்து இந்திய விமானங்கள் செல்வதற்கான வான்வெளியை பாகிஸ்தான் மீண்டும் திறந்திருக்கிற நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது தொடரும் என இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


