சண்டக்கான்:
மலேசியாவின் சபா மாநிலம் சண்டக்கான் பகுதியில் 200 கிலோ எடையுடைய ராட்சத முதலை ஒன்று பிடிபட்டது.
கிட்டத்தட்ட 2.7 மீட்டர் நீளம் கொண்ட அந்த முதலை, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) காலை கம்போங் சுங்கை ஒபார் பகுதியில் சபா குடிமைத் தற்காப்புப் படையினரால் பிடிக்கப்பட்டது.
அந்த முதலை ஒரு நாயைத் துரத்தியதுடன், பின்னர் அருகிலிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்து கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக தகவல் பெற்ற குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, முதலையின் வாயை கயிற்றால் கட்டி, அது மூர்க்கமாக நடக்காதவாறு கண்களை போர்வையால் மூடி பாதுகாப்பாக கட்டுப்படுத்தினர்.
மொத்தம் 49 நிமிடங்கள் நீடித்த இந்த நடவடிக்கையில் எட்டு அதிகாரிகள் ஈடுபட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள், குறிப்பாக ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் அருகே வசிப்போர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், காட்டு விலங்குகள் அல்லது அபாயகரமான விலங்குகளைப் பார்த்தவுடன் அவசரச் சேவை எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.




