கோலாலம்பூர்:
பதிவு செய்யப்படாத மற்றும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு (Prescription) இன்றி காண்டாக்ட் லென்ஸ்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக மலேசிய மருத்துவ சாதன ஆணையம் (MDA) கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
சில்லறை விற்பனையாளர்களுக்குத் தெரிந்தே பதிவு செய்யப்படாத லென்ஸ்களை விநியோகிக்கும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை (Suppliers and Wholesalers) இப்போது MDA குறிவைத்துள்ளது.
கடந்த மார்ச் 16 அன்று வாங்சா மாஜுவில் (Bazaria Wangsa Maju) உள்ள 19 இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. இதில் உணவு மற்றும் பொதுப் பொருட்கள் விற்பனை செய்யும் உரிமத்தை வைத்துக்கொண்டு காண்டாக்ட் லென்ஸ்களை விற்பனை செய்தல், தாய்லாந்து மற்றும் சீனாவிலிருந்து முறையாகப் பதிவு செய்யப்படாமல் இறக்குமதி செய்யப்பட்ட லென்ஸ்கள், சரியான லேபிள்கள் இல்லாத மற்றும் ஏற்கனவே சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட (Recall) தரமற்ற லென்ஸ்கள் என்பன விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
பதிவு செய்யப்படாத லென்ஸ்களை விற்பனை செய்த கடைகளை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டது.
RM10 என இவ்வளவு குறைந்த விலையில் விற்கப்படும் லென்ஸ்கள் பெரும்பாலும் மருத்துவத் தரமற்றவை. இவை கண்களில் தொற்று (Infections), அலர்ஜி, மற்றும் நிரந்தரக் கண் பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மலேசிய மருத்துவ சங்கம் (MMA), பதிவு செய்யப்படாத மருத்துவ சாதனங்களைப் பயன்படுத்துவது அல்லது பரிந்துரைப்பது சட்டவிரோதமானது என்றும், இது நோயாளிகளின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என்றும் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.




