Last Updated:
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி அமைச்சர் மாணிக்ராவ் கோகடே சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி, எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைச்சர் ஒருவர் சட்டமன்றத்தில் அமர்ந்துகொண்டு ஆன்லைன் ரம்மி விளையாடும் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைத்திருக்கும் பாஜக கூட்டணியில், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் உள்ளன. மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் இருந்துவருகிறார். மேலும், கூட்டணியில் இருக்கும் இரு கட்சிகளும் ஆட்சியில் அங்கம் வகிக்கின்றன.
அதன்படி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸில் இருக்கும் மாணிக்ராவ் கோகடே வேளாண் துறை அமைச்சராக இருந்து வருகிறார். தற்போது அம்மாநிலத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இவர் சட்டமன்றத்தினுள் அமர்ந்துகொண்டு பலரின் உயிரை பலிவாங்கும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.
இந்த வீடியோவை சரத்பவார் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த ரோஹித் பவார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, “எண்ணற்ற வேளாண் பிரச்சனைகள் நிலுவையில் உள்ளன. ஒவ்வொரு நாளும் மாநிலத்தில் எட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். வேளாண் அமைச்சர் எதுவும் செய்வதற்கு இன்றி, ரம்மி விளையாடி கொண்டிருக்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி எதிர்க்கட்சியினர் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அமைச்சர் மாணிக்ராவ் கோகடே அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
கேமரா இருக்கிறது என தெரிந்தும், நான் ஏன் அங்கே உட்கார்ந்து விளையாட வேண்டும்? நான் அதைத் தவிர்க்க விரும்பினேன், இரண்டு முறை முயற்சித்தேன், விளையாட்டை எப்படித் தவிர்ப்பது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அடுத்த நொடியே அதைத் தவிர்த்துட்டேன்.
முழு வீடியோவையும் பார்த்தால் நான் அதனை தவிர்த்தது தெரியும். உண்மையில், யூடியூப் நேரலையில், கீழ் சபையில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க சென்றேன். அப்போது அந்த கேம் என் போனில் டவுன்லோட் ஆகிவிட்டது. நான் அதை தவிர்க்க முயற்சித்தேன். ஆனால், அது நடக்கவில்லை. முழு வீடியோ இல்லாமல் எதிர்க்கட்சி என்னை குறிவைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
July 20, 2025 10:09 PM IST


