Last Updated:
சஞ்சு சாம்சனை வாங்குவதன் மூலமாக அவரை கேப்டன் பொறுப்பில் நியமிக்கலாம் என சென்னை அணி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அந்த அணியில் இடம்பெற மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அணி நிர்வாகத்துக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அணியிலிருந்து விடுவிக்கும்படி சஞ்சீவ் சாம்சன் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
கடந்த சில வாரங்களாகவே அவர் சென்னை அணியில் இடம் பெறுவார் என்று பேசப்பட்டு வருகிறது. ட்ரேட் முறையில் சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு சென்னை அணி தரப்பில் திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை அணியை பொருத்தவரையில் எம்.எஸ். தோனி முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு அவர் அணியின் கேப்டனாக தொடர்வாரா என்பது உறுதியாக கூற முடியவில்லை. தான் அடுத்த ஆண்டு விளையாடுவது குறித்து முடிவு எடுக்க இன்னும் நாட்கள் இருப்பதாக தோனி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில், சஞ்சு சாம்சனை வாங்குவதன் மூலமாக அவரை கேப்டன் பொறுப்பில் நியமிக்கலாம் என சென்னை அணி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தன்னை விடுவிக்கும்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சஞ்சீவ் சாம்சன் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை பெறுவதற்கு இன்னும் சில ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதே நேரம், சஞ்சு சாம்சனை டிரேடு முறையில் சென்னை அணிக்கு வழங்கினால், அவருக்கு மாற்று வீரராக ரவீந்திர ஜடேஜா அல்லது ருதுராஜ் கெய்க்வாட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்டு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவினாலும், சஞ்சு சாம்சன் தரப்பிலிருந்து தான் அணி மாறுவது குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
August 13, 2025 8:54 PM IST


