Last Updated:
2018 ஆம் ஆண்டு முதல் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். 2021 ஆம் ஆண்டு அவரை கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்தது என்பது கவனிக்கத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்க உள்ளதாக தகவல்கள் பரவின. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் உறுதி செய்யப்படாத நிலையில், தற்போது சென்னை அணி நிர்வாகத்தின் சீனியர் அதிகாரி ஒருவர் கூறியதாக வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த சீசன் சென்னை அணிக்கு மோசமானதாக அமைந்தது. இந்த சீசனில் சென்னை அணி பத்தாவது இடத்திற்குச் சென்று ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்டார். இருப்பினும் அவராலும் சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டுவர முடியவில்லை.
இதற்கிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்குவதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தகவல்கள் பரவி வருகிறது. இருப்பினும் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக யாரும் உறுதிப்படுத்தவில்லை.
சென்னை அணி நிர்வாகத்தின் சீனியர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிரபல செய்தித்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்த அதிகாரி கூறியதாவது- “நாங்கள் நிச்சயமாக சஞ்சு சாம்சன் எங்கள் அணியில் இடம் பெறுவதை விரும்புகிறோம். அவர் ஒரு இந்திய வீரர். கீப்பர் ஆகவும் தொடக்க வீரராகவும் அவரால் களமிறங்க முடியும்.
அவரை வாங்குவதற்கு வாய்ப்புகள் இருந்தால் கண்டிப்பாக அவரை பெறுவோம். ட்ரேடு முறையில் எப்படி வாங்கலாம் என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முதற்கட்டமாக அவர் சென்னை அணியில் இடம் பெற சாத்தியங்கள் இருந்தால் அதனை செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரேடு முறையில் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். 2021 ஆம் ஆண்டு அவரை கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்தது என்பது கவனிக்கத்தக்கது.
July 01, 2025 5:26 PM IST