Last Updated:
அமுல் நிறுவனத்தின் விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கும் சிறுமியின் புகைப்படம் அரசியல் தலைவர் சசிதரூர் சகோதரியான ஷோபாதரூரின் சிறு வயது புகைப்படம் என்று கூறும் வீடியோ ஒன்று வைரலான நிலையில், அமுல் நிறுவனம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் வைரலான ஒரு வீடியோ, சசிதரூர் சகோதரி ஷோபா தரூர் ஸ்ரீனிவாசனின் குழந்தைப் பருவப் புகைப்படமே புகழ்பெற்ற அமுல் கேர்ள் உருவாக்கத்துக்கு ஊக்கமாக இருந்ததாகக் தெரிவித்திருந்தது. ஆனால், இந்தக் கருத்தை அமுல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
அமுல் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “அமுல் கேர்ள் விளக்கப்படம் திருமதி ஷோபாதரூரை தழுவியது அல்ல. அந்த கதாபாத்திரத்தை முன்னாள் விளம்பரத் தலைவரான சில்வெஸ்டர் டாகுன்ஹா மற்றும் கலைஞர் யூஸ்டேஸ் பெர்னாண்டஸ் உருவாக்கினர்” என்று விளக்கம் அளித்தது.
1960-களில் நடந்த சம்பவங்கள் குறித்து அந்த வீடியோவில் கூறப்பட்ட கதை சுவாரஸ்யமாக இருந்தது. சில்வெஸ்டர் டாகுன்ஹா தனது நண்பர் சந்திரன் தரூரிடம் அவரது குழந்தைகளின் புகைப்படங்களைக் கேட்டார். அதில், 10 மாதங்கள் வயதான ஷோபாவின் புகைப்படம் “முற்றிலும் வெண்ணெய் போன்ற” பெண்ணின் அடித்தளமாக அமைந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
உண்மையில், 1961-ல் பால் பவுடர் பாக்கெட்டில் இடம்பெற குழந்தையைத் தேடிய அமுல், 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை நிராகரித்த பிறகு ஷோபாவின் படத்தைத் தேர்ந்தெடுத்ததாக ஒன்மனோரமா கூறுகிறது. பின்னர், விளம்பரங்கள் வண்ணமயமானபோது, அவரது தங்கை ஸ்மிதா தரூர் முதல் வண்ண அமுல் குழந்தையாக மாறினார்.
இந்தக் கதைக்கு பதிலளித்த ஷோபா ஸ்ரீனிவாசனும் உறுதிப்படுத்தி அதற்கான விளக்கத்தையும் அளித்தார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “ஆம், நான் முதல் அமுல் குழந்தைதான். ஆம், என் புகைப்படங்களை ஷ்யாம் பெனகல் எடுத்தார். என் சகோதரி ஸ்மிதா தரூர் இரண்டாவது வண்ண புகைப்பட பிரச்சாரத்தில் இருந்தார்” என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். இருப்பினும், தனது புகைப்படம் யூஸ்டேஸ் பெர்னாண்டஸ் பின்னர் வரைந்த புகைப்படத்திற்கு நேரடியாக உத்வேகமாக இருந்ததா என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
1966-ல் அறிமுகமான, சிவப்பு புள்ளிகள் கொண்ட உடை அணிந்த, நீல நிற முடி கொண்ட சிறுமி, அமுல் கேர்ள், போல்சன் பட்டர் மாஸ்காட்டுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது. “முற்றிலும் வெண்ணெய் போன்ற சுவையானது” என்ற விளம்பரத்துடன், கடந்த ஐந்து தசாப்தங்களாக 4,000-க்கும் மேற்பட்ட கார்ட்டூன் விளம்பரங்களில் தோன்றி, அரசியல் முதல் விளையாட்டு, பாப் கலாச்சாரம் வரை எல்லாவற்றையும் கிண்டல் செய்தார்.
சசிதரூர் தானும், தனது சகோதரிகளும் அமுல் குழந்தைகளாக இருந்ததைப் பற்றி முன்பு ஒருமுறை எழுதியுள்ளார். பின்னர், அவர் அரசியலுக்குள் நுழைந்ததும், பிரபலமான அமுல் கேர்ள் பாணியைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு கார்ட்டூன் விளம்பரத்திலும் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
August 27, 2025 3:20 PM IST


