Last Updated:
கோவிட்-19 நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் மில்லியன் கணக்கான மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், “எங்கள் கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டவை” என்று சீரம் நிறுவனம் X போஸ்ட் ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று மிகவும் தீவிரமாக இருந்த நேரத்தில் கோவிஷீல்ட் என்ற தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் உருவாக்கியது. பலரும் இந்த தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனர். இந்த சூழலில் நாடு முழுவதும் இளம் வயதினர் பலர் திடீர் ஹார்ட் அட்டாக் போன்ற இதய பாதிப்பு காரணமாக உயிரிழந்து வருவது தொடர்கதையாகி உள்ளது.
சமீபத்தில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “உலகெங்கிலும் உள்ள பல ஆய்வுகள் சமீபத்தில் அதிகரித்து வரும் மாரடைப்புகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளன” என்று குறிப்பிட்டார். இந்நிலையில் தான் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை தயாரித்து, விநியோகித்த சீரம் நிறுவனம் தங்களின் கோவிட்-19 தடுப்பூசி “பாதுகாப்பானது மற்றும் அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.
கோவிட்-19 நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் மில்லியன் கணக்கான மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், “எங்கள் கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டவை” என்று சீரம் நிறுவனம் X போஸ்ட் ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் AIIMS நடத்திய சமீபத்திய விரிவான ஆய்வுகள், COVID-19 தடுப்பூசிக்கும் இந்தியாவில் நிகழும் எதிர்பாராத இறப்புகள் பற்றிய அறிக்கைகளுக்கும் இடையே நேரடி தொடர்பு இல்லை என்பதை கண்டறிந்துள்ளன. இதை சுட்டிக்காட்டியிருக்கும் சீரம் நிறுவனம் குறிப்பிட்ட அந்த போஸ்ட்டில் ICMR மற்றும் AIIMS-ஆல் நடத்தப்பட்ட இரண்டு பெரிய அளவிலான ஆய்வுகள் COVID-19 தடுப்பூசிகளுக்கும், திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளன. நாட்டில் நிகழ்ந்துவரும் திடீர் மரணங்கள் என்பது மரபியல், பின்பற்றப்படும் வாழ்க்கை முறை, முன்பே இருக்கும் நிலைமைகள் மற்றும் கோவிட் தொற்றுக்கு பிந்தைய சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் விளைவாக இருக்கலாம் என்றும் ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கர்நாடக முதல்வரின் கருத்துக்கு பின் மத்திய சுகாதார அமைச்சகமும் முழுமையான ஆய்வுகள் தடுப்பூசிகளை இதுபோன்ற திடீர் மரணங்களுடன் இணைக்கும் எந்த ஆதாரத்தையும் வெளிப்படுத்தவில்லை என்று தெளிவுப்படுத்தியுள்ளது. பெருந்தொற்றின்போது இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள்தான் பெரும்பாலும் மக்களுக்கு வழங்கப்பட்டன. இதனிடையே கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 500-க்கும் மேற்பட்டோர் திடீரென இறந்தது, இந்தியாவில் அதிகரித்துவரும் மாரடைப்பு பாதிப்புகள் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளது.
ICMR மற்றும் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், 19 மாநிலங்களில் உள்ள 47 மருத்துவமனைகளில் 18 முதல் 45 வயதுடைய பெரியவர்களிடையே ஏற்பட்ட திடீர் மரணம் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், ஆய்வு முடிவானது அக்டோபர் 2021 முதல் மார்ச் 2023 வரையிலான தரவுகளின் அடிப்படையில் கண்டுபிடிப்புகள், கோவிட்-19 தடுப்பூசிகள் திடீரென விவரிக்க முடியாத மரணம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன என்பதற்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.
July 06, 2025 7:24 PM IST