கோலாலம்பூர், என்.பி.இ. நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டுச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இச்சம்பவம் குறித்து அரச மலேசியக் காவல்துறை உடனடியாகவும் விரிவாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நில உரிமை அல்லது வழிபாட்டுத் தலத்தின் அமைவிடம் சார்ந்த எந்தவொரு விவகாரமும் சட்டப்பூர்வமான வழிமுறைகள், பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட முறையான நடைமுறைகள் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டுமே தவிர, தூண்டல் நடவடிக்கைகள், வன்முறை அல்லது சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் செயல்கள் மூலம் கையாளப்படக் கூடாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த ஆலயத்தை இடமாற்றம் செய்வது தொடர்பான விவகாரத்தில், ஆலய நிர்வாகத்தினர் ஏற்கனவே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்முயற்சி எடுத்துள்ள நிலையில், அந்த நடைமுறைகள் சீராக முடிவடையத் தேவையான கால அவகாசமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.விசாரணையின் முடிவில் சட்டமீறல்கள் நிரூபிக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பான நபர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
இத்தகைய சம்பவங்களைப் பயன்படுத்தி இன, சமய ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், சமயச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும், வழிபாட்டுத் தலங்களை மதிப்பதும், சமூக அமைதியைப் பேணுவதும் நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் என்றார்.
போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் எந்தவொரு ஊகங்களையும் பரப்ப வேண்டாம் என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் அனைத்து மக்களும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பாகவும், பரஸ்பர மரியாதையுடனும், அமைதியாகவும் வாழ்வதையே விரும்புவதாகவும், பதற்றங்களை உருவாக்காமல் நீதியான முறையில் தீர்வுகாண்பதே முக்கியம் என்றும் தமது ஊடக அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



