Last Updated:
நிலக்கரி ஊழல் பணம் ரூ.20 கோடி கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.
நிலக்கரி ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கின் ஒரு பகுதியாக தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான ஐபேக்கின் கொல்கத்தா அலுவலகத்திலும், அதன் நிறுவனரும் இயக்குநர்களில் ஒருவருமான பிரதீக் ஜெயின் இல்லத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2021-ஆம் ஆண்டு முதல் ஐபேக் நிறுவனம் ஆலோசனை தந்து வரும் நிலையில், சோதனை நடக்கும்போதே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதீக் வீட்டுக்குள் நுழைந்து முக்கிய ஆதாரங்களை எடுத்துச் சென்றதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், மேற்கு வங்கத்தில் நிலக்கரித் திருட்டு மூலம் ஈட்டப்பட்ட சுமார் 20 கோடி ரூபாய் ஹவாலா நிதி, ஐபேக் நிறுவனத்திற்குச் சென்றதாக அமலாக்கத்துறை புகார் கூறியுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து கோவாவிற்கு ஆர் காந்தி லால் என்ற ஹவாலா நிறுவனம் மூலம் 20 கோடி ரூபாய் மாற்றப்பட்டதாகவும் நிலக்கரி முறைகேட்டின் முக்கியக் குற்றவாளியான அனுப் மஜியின் கணக்காளரின் வாட்ஸ்அப் உரையாடல் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த பணம், ஹெர்ட்ஸ் அண்ட் பிக்சல் மற்றும் ஏஎஸ்எம் ஈவென்ட் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களின் ஊழியரான அக்ஷய் குமார் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்த நிறுவனங்கள், கோவா தேர்தலின் போது I-PAC-க்காகப் பணியாற்றியதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை விவரித்துள்ளது.
கோவா தேர்தலில் நிலக்கரி ஊழல் பணம் ரூ. 20 கோடி பயன்பாடு! – திரிணாமுல் காங்கிரஸ் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு


