கோவா:
இந்தாண்டுக்கான இந்தியா அனைத்துலகத் திரைப்பட விழா (IFFI) இன் நிறைவு விழாவில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதால் கவுரவிக்கப்பட்டார். 50 ஆண்டுகளாக இந்திய திரைத்துறைக்குச் செய்த சிறப்பான பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ரஜினிகாந்திற்கு விருதை வழங்கினார். விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, ரன்வீர் சிங் ரஜினிகாந்தின் கரத்தை பணிவுடன் முத்தமிட்ட தருணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ‘பாஷா’ படத்தின் காட்சிகளை நினைவூட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில் பல மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டதோடு, திரைத் துறையைச் சார்ந்த பல கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளும் நடைபெற்றன.
விருது பெற்றபின், ரஜினிகாந்த் தனது நன்றியைத் தெரிவித்தார்.
“தமிழ் மக்களின் அன்பே என்னை இத்தனை உயரத்தில் நிறுத்தியுள்ளது. எந்தப் பிறவியிலும் இருந்தாலும், நடிகராகவே மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்பது என் ஆசை,” என அவர் உருக்கமாகக் கூறினார்.




