International
oi-Halley Karthik
பெய்ஜிங்: சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, தைவானின் கிழக்குக் கடற்பகுதியில் புதிய கடலோர காவல்படை ரோந்துப் பணியை இன்று தொடங்கியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. விரைவில் தைவான் கதை முடிப்பதற்கான டிரெய்லர்தான் இந்த ரோந்து என்று சொல்லப்படுகிறது.
முன்னாடி ஒரு காலத்துல.. சீனாவின் ஒரு பகுதியாத்தான் தைவான் இருந்துச்சு! ஆனா.. சீனா புரட்சி நடந்தபோது பெரிய பணக்காரர்கள் எல்லாம் தைவானில் போய் செட்டில் ஆகிவிட்டனர். என் காட்டில் நான்தான் ராஜா என்பதை போல.. அவர்கள் தற்போது தைவானை கட்டி ஆண்டு வருகிறார்கள். இதை பார்த்து டென்ஷன் ஆனா சீனா.. தைவானை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டுவர யோசித்திருக்கிறது. இதற்காக தனது ராணுவத்தை பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இன்று தைவானின் கிழக்கு பகுதியில் சீன கடற்படை அத்துமீறி ரோந்து மேற்கொண்டிருக்கிறது. முன்னதாக இப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த கடற்படைப் பிரிவுக்குப் பதிலாக, தற்போது இந்த கடலோர காவல்படை ரோந்துப் பணி தொடங்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை தைவான் அரசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதோடு, சர்வதேச அளவில் கவலையையும் தூண்டியுள்ளது.
சீனாவின் கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பகுதியில் சட்ட அமலாக்க ரோந்துப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும், சீனாவின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட கடல் பகுதிகளில் இத்தகைய ரோந்துப் பணிகள் இனி அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள தைவான் கடலோர காவல்படை, நிலைமையைக் கண்காணிக்கத் தனது கப்பல்களை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், எங்கள் கடல் பகுதியில் அத்துமீறும் சீனக் கப்பல்களை வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று தைவான் எச்சரித்துள்ளது.
தைவான் கடல் பகுதியில் உள்ள தனது நாட்டு கப்பல்கள், சீனாவின் கடலோர காவல்படை விடுக்கும் எந்தவொரு சோதனை அல்லது ஆய்வுக் கோரிக்கைகளையும் புறக்கணிக்க வேண்டும் என்று தைவான் அரசு அறிவுறுத்தியுள்ளது. தேவைப்பட்டால் தைவான் கடலோர காவல்படை தலையிட்டுப் பாதுகாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்தில் சீனா இத்தகைய ரோந்துப் பணியை மேற்கொள்வது இது இரண்டாவது முறையாகும். ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் தங்களின் கடல் எல்லைகள் குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்கியதற்குப் பதிலடியாகவே சீனா இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது. தைவானுக்கு அருகிலுள்ள கடல் பகுதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா உரிமை கோருகிறது.
சீனாவின் இந்தத் தன்னிச்சையான நடவடிக்கை அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடனான ராஜதந்திர மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தைவான் தன்னை ஒரு தனி இறையாண்மை கொண்ட நாடாகக் கருதும் நிலையில், சீனா தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதி என்றே தொடர்ந்து கூறி வருகிறது. இந்த எல்லைப் பிரச்சனை தற்போது கடல்சார் ரோந்துப் பணிகளால் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

