சிரம்பான் | மார்ச் 27, 2026:
நெகிரி செம்பிலான், கோலா பிலாவில் உள்ள ரம்பாங் பானாஸ் (Masjid Rembang Panas) மசூதிக்கு அருகிலுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தின் கீழ், பச்சிளம் ஆண் குழந்தை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோலா பிலா மாவட்டத் துணைப் போலீஸ் தலைவர் டிஎஸ்பி ஷம்ரோல் ஷா ராம்லி (DSP Shamrol Shah Ramli) இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில்:
நேற்று மாலை 6:30 மணியளவில் உள்ளூர்வாசி ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
முழு வளர்ச்சி அடைந்த அந்த ஆண் குழந்தையின் உடலில் இன்னும் தொப்புள்கொடி (Umbilical cord) இருந்தது.
முதற்கட்ட விசாரணையில், அந்தக் குழந்தை சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என்றும், உடல் அழுகத் தொடங்கிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது.
குழந்தையின் உடலில் வெளிப்புறக் காயங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக துவாங்கு அம்புவான் நஜிஹா (Tuanku Ampuan Najihah) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் தண்டனைச் சட்டம் பிரிவு 318-இன் கீழ் (குழந்தைப் பிறப்பை மறைத்து சடலத்தை வீசுதல்) விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகக் கோலா பிலா மாவட்டக் காவல்துறை தலைமையகத்தை 06-4842999 என்ற எண்ணிலோ அல்லது விசாரணை அதிகாரி Supiah Ishak (019-9933978) அவர்களையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




