கோலாலம்பூர் சென்ட்ரல்–ஜோகூர் பாரு சென்ட்ரல் இடையிலான ETS மின்சார ரயில் சேவை நாளை (டிசம்பர் 12ஆம் தேதி -வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.
கோலாலம்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான ETS ரயில் சேவைக்கான கட்டணம் 82 ரிங்கிட்டிலிருந்து தொடங்குகிறது. தொடக்க விழாவை முன்னிட்டு, டிசம்பர் 12 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 11 வரை சுமார் ஒரு மாத காலத்திற்கு பயணச் சேவைகளுக்கு 30% கட்டணக் கழிவு வழங்கப்படுமென மலாயன் ரயில்வே பெர்ஹாட் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று விடியற்காலையில், கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாருவுக்கு புதிய மின்சார ரயில் சேவை கோலாலம்பூர் ரயில் நிலையத்திலிருந்து முன்னோட்டத்திற்காக புறப்பட்டதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜோகூர் பாருவில் உள்ள கெம்பாஸ் பாரு நிலையத்தை ரயில் சென்றடையும், அங்கு ஜோகூர் ரீஜண்ட் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆகியோர் சேவையின் தொடக்க விழாவில் கலந்து கொள்வார்கள்.
கோலாலம்பூர்–ஜோகூர் பாரு இடையில் நாள்தோறும் நான்கு ETS ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன. அதேநேரம்இது தற்போதைய ஐந்து முதல் ஏழு மணி நேர சாலைப் பயணத்தை, சுமார் 4.5 மணி நேரமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 312 பயணிகளுக்கான இருக்கைகள் கொண்ட ஆறு பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில், நான்கு கழிப்பறைகள், ஒவ்வொரு இருக்கையிலும் பிளக் பாயிண்டுகள், உணவு பரிமாறும் பிரத்யேக “கோச் பிஸ்ட்ரோ” மற்றும் முஸ்லிம் பயணிகளுக்கான பிரார்த்தனை அறைகள் உள்ளன.




