எம்.எஸ். மலையாண்டி
* மாற்றத்திற்கான அலை வீசும் எனக் கருதப்பட்டதுபோல எதுவும் நடக்கவில்லை
* ஜசெகவின் கோட்டையாகவே கோலகுபுபாரு தொகுதி இன்னும் நீடிக்கிறது
* பெரிக்காத்தான் நேஷனலுக்கான செல்வாக்கையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது


சிலாங்கூர் மாநிலம் கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் பலரும் எதிர்பார்த்தபடி பக்காத்தான் ஹராப்பான் – ஜசெக அந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொள்வதில் வெற்றியும் கண்டிருக்கிறது. இத்தொகுதி இந்த வெற்றியின் மூலம் ஜசெகவின் கோட்டையாகவே நீடிக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அரசியல் ரீதியாக மிகப்பெரிய மாற்றத்திற்கான அலை வீசும் என்று பலர் கருதினர். ஆனால் வாக்காளர்கள் அதற்கு எதிர்மாறாகத்தான் வாக்களித்திருக்கிறார்கள். இது தொடர்பில் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முஜிபுர் அப்துல் மொய்ஸ் தனது கருத்துகளைப் பதிவு செய்திருக்கின்றார்.
வாக்காளர்களின் சமிக்ஞை என்ன?
கோலகுபுபாரு இடைத்தேர்தல் முடிவானது வாக்காளர்கள் அரசியல் நிலைத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் விரும்புவதைக் காட்டி இருக்கிறது. இன, சமய விவகாரங்கள் அடிப்படையிலான அரசியல் சித்தாந்தங்களை அவர்கள் நிராகரித்திருப்பதை இந்த இடைத்தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டி இருக்கிறது.
வாக்காளர்களின் எண்ண அலைகளைப் பிரதிபலிக்கும் வகையிலும் இந்த இடைத்தேர்தல் முடிவு அமைந்திருப்பதைக் காண முடிகிறது என்பதை அவர் விவரித்திருக்கிறார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான், அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி
தலைமையிலான பாரிசான் நேஷனல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒற்றுமை அரசாங்கத்தின் மீது வாக்காளர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதையும் இந்த இடைத்தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது.


மலாய் வாக்காளர்கள்
இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய் வாக்காளர்கள் அளித்திருக்கும் வாக்குகள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பானுக்கு கிடைத்த மலாய் வாக்குகள் 39 விழுக்காடாக இருந்தது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் இது 42.7 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்குப் பெரிய அளவில் மலாய் வாக்குகள் கிடைக்காத இடங்களில்கூட இந்த முறை அந்தக் கூட்டணிக்குக் கிடைத்த மலாய் வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வாக்காளர்கள் ஆதரவும் இந்த முறை பக்காத்தான் ஹராப்பான் பக்கம் திரும்பி இருக்கிறது. முன்பு இவர்களின் வாக்குகள் பெரிக்காத்தான் நேஷனலுக்குப் பெரிய அளவில் கிடைத்தன.


வெற்றிக்கு என்ன காரணம்?
இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றதற்கு நிறைய அடிப்படைக் காரணங்கள் உள்ளன. இந்த இடைத்தேர்தலில் மலாய் வேட்பாளரைப் பெரிக்காத்தான் நேஷனல் நிறுத்திய நிலையில் தேர்தல் முடிவு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் எனவும் புத்ராஜெயாவுக்குத் தேர்தல் முடிவு மூலம் ஒரு முக்கியமான சமிக்ஞையை அனுப்புவோம் எனவும் அந்தக் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறியிருந்தார். 

பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் வியூகங்களைச் சமாளிக்கும் விதமாக பக்காத்தான் ஹராப்பான் மேற்கொண்ட தேர்தல் பரப்புரைகளும் வாக்காளர்களைச் சந்தித்த அணுகுமுறைகளும் நல்ல பலனை அளித்திருப்பதைத் தேர்தல் முடிவு காட்டுகிறது.
பக்காத்தான் ஹராப்பான் உள்ளூர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் என்னென்ன திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் வாக்காளர்களைக் கவர்ந்திருக்கிறது.
அது மட்டுமன்றி தெஸ்லா, கூகுள், மைக்ரோசாஃப்ட், போயிங் போன்ற பெரிய நிறுவனங்களின் முதலீடுகளைக் கவர்வதில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெற்றி கண்டதும் வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.
பாலஸ்தீன விவகாரத்தில் அரசாங்கம் கொண்டிருந்த நிலைப்பாடு, அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு போன்றவற்றையும் வாக்காளர்கள் நன்கு மதிப்பீடு செய்து வாக்களிப்பு தினத்தில் தீர்க்கமான முடிவை எடுத்திருக்கின்றனர்.
இளம் வேட்பாளர்
ஜசெக இந்த இடைத்தேர்தலில் இளம் வேட்பாளரைக் களம் இறக்கி இருப்பதும் மிகச்சரியான முடிவாக அமைந்தது.
அரசியலில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமானால் இளம் தலைவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ஜசெக இளம் வேட்பாளரை இந்த இடைத்தேர்தலில் களமிறக்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் தோல்வியைச் சந்தித்தாலும் கோலகுபுபாருவில் மலாய் வாக்காளர்களுள் பலர் அந்தக் கூட்டணியின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர் என்பதையும் மறுக்க முடியாது.
கடந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலுக்குக் கிடைத்த மலாய் வாக்குகள் 55.4 விழுக்காடாக இருந்தது. ஆனால் நடந்து முடிந்த கோலகுபுபாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் இது 56.2 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது.


அது மட்டுமன்றி மற்ற இனங்களைச் சேர்ந்த வாக்காளர்களும் இந்த முறை பெரிக்காத்தான் நேஷனலுக்கு வாக்களித்திருப்பதும் அதிகரித்திருக்கிறது. சீனர்களின் வாக்குகள் இந்தக் கூட்டணிக்கு 1.4 விழுக்காடாகவும் இந்தியர்களின் வாக்குகள் 3.3 விழுக்காடாகவும் மற்ற வாக்காளர்களின் வாக்குகள் 1.9 விழுக்காடாகவும் பதிவாகி இருக்கிறது.


அந்த வகையில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு வாக்காளர்களிடம் இன்னும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு செல்வாக்கு இருப்பதை மறுக்க முடியாது. இதுபற்றி கருத்துரைத்திருந்த முஹிடின், இந்த இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலுக்குக் கிடைத்த வாக்குகள் குறையவில்லை எனவும் முன்பு இருந்ததுபோல் அப்படியேதான் உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ஒவ்வொரு தேர்தலும் வெவ்வேறானது. அது நடப்புச் சூழ்நிலைகளைப் பொறுத்து அமைகிறது. இதற்குப் பிறகும் இடைத்தேர்தல் நடைபெற்றால் பக்காத்தான் ஹராப்பானுக்கும் சரி, பெரிக்காத்தான் நேஷனலுக்கும் சரி வெற்றி வாய்ப்பு சம அளவில்தான் உள்ளது. இந்த இடைத்தேர்தல் வெற்றிகள் அந்தத் தொகுதிகளின் நிலவரத்தைப் பொறுத்துத்தான் அமையும் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


கோலகுபுபாரு இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் மக்களின் எண்ண அலைகள் என்ன என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டது.


