கோத்தா பெலுட், ஏப்ரல் 5 :
சபா மாநிலம், உலு குகுட் சாலையில் கற்களை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று காலை நிகழ்ந்த இந்த கோர விபத்தில், 55 வயதான லோரி ஓட்டுநர் உயிரிழந்ததை மலேசிய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்தின் வீரியத்தால் ஓட்டுநர் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டதாகத் தெரிகிறது. லோரி கவிழ்ந்த அடுத்த சில நிமிடங்களில் தீப்பிடித்து எரியத் தொடங்கிய நிலையில், ஓட்டுநரின் உடல் லோரிக்கு அருகிலேயே கண்டெடுக்கப்பட்டது.
காலை 11.36 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இது குறித்து கோத்தா பெலுட் தீயணைப்பு நிலையத் தலைவர் எல்ஜி பாகுக் கூறுகையில், “மீட்புப் படையினர் மதியம் 12.10 மணியளவில் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காகப் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.”
இந்த விபத்தினால் உலு குகுட் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்திற்கான காரணம் தொழில்நுட்பக் கோளாறா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்துப் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




