கோத்தா கினபாலு:
இன்று அதிகாலை ‘இந்தா பெர்மாய்’ (Indah Permai) பகுதியில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் குறித்த விசாரணையில், 24 மணி நேரத்திற்குள் முக்கியக் குற்றவாளியைப் போலீசார் பிடித்துள்ளனர்.
நேற்றுக் காலை 6:30 மணியளவில், ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் பெண்ணின் கை மற்றும் கால்களைக் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் கண்டெடுத்தனர்.
பின்னர், போலீசார் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், காலை 11:40 மணியளவில் மற்றொரு குப்பை கிடங்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலை மற்றும் உடல் பகுதி (Torso) மீட்கப்பட்டன.
மொத்தம் 7 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டுள்ளது. மதியம் வரை 5 பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 பாகங்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் 70 வயது மதிக்கத்தக்க உள்ளூர் முதியவர் ஒருவர் நேற்று மாலை 5 மணியளவில் கோத்தா கினபாலுவில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மீட்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்களில் கிடைத்த தடயங்கள் மூலம் குற்றவாளியைப் போலீசார் விரைவாகக் கண்டுபிடித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ‘பொறாமை’ (Jealousy) காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது என்று, கோத்தா கினபாலு மாவட்ட தற்காலிக போலீஸ் தலைமை அதிகாரி சூப்பிரிண்டெண்டன் சையத் லோட் சையத் அப்துல் ரஹ்மான் கூறினார்.
“முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது. தற்போது இக்கொலை வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது. சந்தேக நபர் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதன் பின்னர் அவர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவார் (Remand),” என்றார்.
கொல்லப்பட்ட பெண் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் என்று நம்பப்படுகிறது. முதியவர் ஒருவரால் இவ்வளவு கொடூரமான முறையில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.




