Last Updated:
ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை சேர்த்ததை சிவசேனா கண்டித்து, ஷாருக் கானுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வங்கதேச அணி வீரர்களை இணைத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, இதை அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை, ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுமார் 9 கோடியே 20 லட்சம் கொடுத்து வாங்கியது.
இது கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தரப்பு மூத்த தலைவர் சஞ்சய் நிருபம், பெரும் விளைவை சந்திப்பதற்கு முன்பே வங்கதேச வீரரை அணியிலிருந்து ஷாரூக் கான் நீக்கிவிடுவது நல்லது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மற்றொரு புறம், உத்தவ் தாக்கரே தரப்புச் சிவ சேனா செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே, பாகிஸ்தான் வீரர்களைப் போலவே வங்கதேச வீரர்களையும் இந்திய மண்ணில் ஐபிஎல் விளையாடத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். முஸ்தஃபிசுரை அணியிலிருந்து நீக்காவிடில், இந்த நாட்டில் வாழ்ந்து, இங்கே சம்பாதிக்கும் ஷாருக் கானுக்கு இந்த மக்களின் உணர்வுகள் புரியவில்லை என்றே அர்த்தம் என்றும் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
ஏற்கனவே உஜ்ஜைனைச் சேர்ந்த சில அமைப்புகள், வங்கதேச வீரர் விளையாடினால் ஆடுகளத்தைச் சேதப்படுத்துவோம் என்று மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அரசியல் ரீதியாகவும் ஷாருக் கானுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
Mumbai,Maharashtra


