கொல்கத்தா சட்டக் கல்லூரி முதலாமாண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மனோஜித் மிஸ்ரா பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடா்பாக, கல்லூரியின் முன்னாள் மாணவரும், வழக்குரைஞருமாக இருந்த மனோஜித் மிஸ்ரா மற்றும் 2 மூத்த மாணவா்கள், கல்லூரி காவலாளி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த மனோஜித் மிஸ்ரா, கடந்த 2024ஆம் ஆண்டு மத்தியில், சட்டக் கல்லூரியின் ஆசிரியா் அல்லாத ஊழியராக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிருந்தே, அவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்த குற்றவாளிகள் பல நாள்களாக திட்டம் தீட்டியுள்ளனர். இவர்கள் 3 பேரும் வேறு சில மாணவிகளிடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக விசாரணை கூறுகிறது. சம்பவத்தின்போது, வலியால் மாணவி மயக்க நிலைக்கு சென்றபோதிலும், இன்ஹேலர் கொடுத்து மாணவியை இயல்புநிலைக்கு கொண்டுவந்து சித்ரவதை செய்துள்ளனர்.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவற்றை விடியோவாக பதிவு செய்வதால், குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் மூவரும் சட்டம் பயின்றவர்கள் என்பதால், சில சட்ட தந்திரங்கள் மூலம் காவல்துறையினரைக் குழப்பிவிடும் விதமாகவும் விசாரணையை தவறாக வழிநடத்துவதற்காக முரண்பாடான வாக்குமூலங்களை அளித்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சயினா சாட்டர்ஜியை 2 முறை மனோஜித் தொடர்புகொண்டு பேசியதாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2007 ஆம் ஆண்டில் சட்டக் கல்லூரியில் சேர்ந்த மனோஜித், சரிவர படிப்பு வராததால், விலகி, மீண்டும் 2017 ஆம் ஆண்டில் கல்லூரியில் சேர்ந்தார்.
2017 ஆம் ஆண்டில், கல்லூரி முதல்வர் அலுவலகம் மீது மனோஜித் தாக்குதல் நடத்தியதாலும், தவறாக நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்ததாலும் மாணவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், அவர் மீது வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை.
தொடர்ந்து, 2019-ல் கல்லூரி வளாகத்திலேயே பெண் ஒருவரைத் தாக்கி, அவரின் உடைகளைக் கிழிந்தெறிந்ததாக மனோஜித் மீது குற்றப்பத்திரிகை செய்யப்பட்டுள்ளது.