கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற 158 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 16 ஓவர்களை கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டது.
டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களத்தில் இறங்கினர்.
பிலிப் சால்ட் 6 ரன்னில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து சுனில் நரைன் முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதன்பின்னர் நிதிஷ் ராணாவுடன் இணைந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
வெங்கடேஷ் ஐயர் 21 பந்துகளில் 42 ரன்களும், நிதிஷ் ராணா 23 பந்துகளில் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆண்ட்ரே ரஸல் 24 ரன்கள் சேர்த்தார். 2 சிக்சர்களை விளாசிய ரின்கு சிங் 20 ரன்களும், ரமன்தீப் சிங் 17 ரன்களும் சேர்க்க 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 157 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
