Last Updated:
காவல்துறை உங்கள் நண்பன் என்று சொன்னாலும், இன்றும் கூட பொதுமக்கள் காவல்துறையை சற்று பயத்துடனேயே பார்க்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவும், கொலை, கொள்ளை போன்ற நடவடிக்கைகள் நடைபெறாமல் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது காவல்துறை. காவல்துறையில் பணியாற்றும் பல அதிகாரிகள் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். காவல்துறை உங்கள் நண்பன் என்று சொன்னாலும், இன்றும் கூட பொதுமக்கள் காவல்துறையை சற்று பயத்துடனேயே பார்க்கிறார்கள்.
ஏனென்றால், ஒரு சில காவலர்கள் மக்களிடம் அடாவடியாக நடந்துகொள்வதே அதற்கு முக்கிய காரணம். ஆனாலும், இன்றும் கூட நம் நாட்டில் மக்களுக்கு உதவக்கூடிய எண்ணற்ற போலீஸ்காரர்கள் உள்ளனர். அப்படித்தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு காவல் நிலையத்தில் உள்ள அத்தனை போலீஸ்காரர்களும் சேர்ந்து ஒரு பெண்ணுக்கு சந்தோஷமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். போலீஸ்காரர்களின் இந்தச் செயலை அனைத்து தரப்பு மக்களும் மனமார பாராட்டி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில், சமீபத்தில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளை கும்பல் அங்கு திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தைக் கொள்ளையடித்ததோடு மட்டுமின்றி, இந்தக் களேபரத்தில் மணப்பெண்ணின் சகோதரனையும் கொன்றனர். இனிமேல் தங்கள் பெண்ணுக்கு எப்படி திருமணம் செய்து வைக்கப் போகிறோம் என்று சோகத்தில் இருந்த குடும்பத்திற்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது உத்தரப்பிரதேச காவல்துறை.
திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது ஏப்ரல் 24ஆம் தேதியன்று மணமகள் உதய் குமாரியின் சகோதரர் ஷிவ்தின் திருடர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மணமகனின் குடும்பத்தினர் பயத்தின் காரணமாக திடீரென திருமணத்தை ரத்து செய்தனர். இதனால் மனம் கலங்கிப் போன மணமகளின் குடும்பத்தினருக்குக் காவல்துறை கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வால் மற்றும் அவரது மனைவி தன்வி ஜெய்ஸ்வால் உறுதுணையாக நின்று, அப்பெண்ணின் திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவி செய்துள்ளனர்.
மணமகளின் குடும்பத்து நிலைமையைப் பற்றி அறிந்ததும், காவல்துறை அதிகாரிகள் திருமணத்தின் முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், மணமகனின் குடும்பத்தினருடன் பேசி திருமணத்திற்கு ஒரு புதிய தேதியையும் நிர்ணயித்தனர். மாவட்டக் கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வால் தலைமையிலான காவல்துறையினர், மணமகளுக்கு ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் ரொக்கம், நகைகள் மற்றும் வீட்டுப் பொருட்களை வழங்கியது மட்டுமல்லாமல், திருமண மண்டபத்தில் மணமகனின் குடும்பத்தினரையும் வரவேற்று கவுரவித்தனர்.
இதற்கிடையில், தனது சகோதரனைக் கொன்று திருமணப் பணத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்களின் தலைவனான கியான் சந்த், மே 8ஆம் தேதியன்று இன்ஸ்பெக்டர் அருண் சிங் தலைமையிலான சிறப்புப் படை (STF) குழுவினருடன் நடந்த மோதலில் படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
ஏற்கனவே போலீசார் கியான் சந்த் குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரிடமிருந்து சட்டவிரோதமான 32-கனரக பிஸ்டல், ஒரு ரைபிள், ஒரு 12-கனரக துப்பாக்கி மற்றும் அதிக அளவிலான தோட்டாக்களைப் போலீசார் மீட்டனர்.
June 11, 2025 6:05 PM IST


