கொரோனா தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களைப் பலவந்தமாகத் தகனம் செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப் பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்குமாறு கோரி ஒரு மாதம் கடந்தும் அதுதொடர்பில் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) அன்று ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்தே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
“கொரோனா தொற்றில் மரணித்தவர்களைப் பலவந்தமாகத் தகனம் செய்வதற்கு எடுத்த நடவடிக்கை தொடர்பிலும், கொரோனா தொற்றில் மரணித்தவர்களின் உடல்களை வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகள் இல்லாமல், அரசியல் பழிவாங்கும் நோக்கிலும், நிபுணர்கள், வைத்திய நிபுணர்கள் எனத் தெரிவிக்கும் சிலரின் பிழையான ஆலோசனையின் படியும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பழிவாங்கும் செயற்பாடு தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து, நாங்கள் மகஜர் ஒன்றில் கையெழுத்திட்டு உங்களிடம் விசேட பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றைக் கேட்டிருந்தோம்.
ஒரு மாதத்துக்கும் அதிக காலம் கடந்தும் இது தொடர்பில் எந்தப் பதிலையும் நீங்கள் எங்களுக்கு இதுவரை வழங்கவில்லை; தெரிவுக்குழு அமைக்கப்படவும் இல்லை. ஆனால், தெரிவுக் குழு அமைக்க வேண்டும் எனக் கோரிய அனைத்துக் கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கி இருப்பதாகச் சபை முதல்வர் தெரிவிக்கிறார். அப்படியானால், கொரோனா தொற்றில் மரணித்தவர்களின் உடல்களைப் பலவந்தமாகத் தகனம் செய்வதற்கு எடுத்திருந்த நடவடிக்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளத் தெரிவுக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதுவரை ஏன் அனுமதி வழங்கவில்லை?” என அவர் கேட்டார்.
இதற்குச் சபாநாயகர் பதிலளிக்கையில், “இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான கூட்டத்தின்போது கலந்துரையாடலாம்” என்றார்.

