
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் விறுவிறுப்பான போட்டி ஒன்றில், கொங்கோ ஜனநாயகக் குடியரசு அணிக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு கம்பீரமாகத் தகுதி பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து அணியை, அதன் அணித்தலைவர் ஹரி கேன் இரண்டு அடுத்தடுத்த கோல்களை அடித்து மீட்டார்.
போட்டியின் முக்கிய திருப்புமுனைகள்:
கொங்கோவின் அதிர்ச்சித் தொடக்கம் (7ஆவது நிமிடம்): போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே கொங்கோ அணியின் முன்களவீரர் பிரையன் சிபெங்கா இங்கிலாந்து பின்கள வீரர்களின் கவனக்குறைவை சாதகமாக்கி, பந்தை அழகாகக் கட்டுப்படுத்தி ஒரு தாழ்வான உதை மூலம் கோல் அடித்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தார்.
கேனின் பதிலடி (75ஆவது நிமிடம்): போட்டியின் 75ஆவது நிமிடத்தில், அந்தோனி கோர்டன் கொடுத்த அருமையான பந்தை, கொங்கோ தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி கேன் தலையால் முட்டி கோலாக மாற்றி போட்டியை சமன் செய்தார்.
கடைசி நிமிட வெற்றி கோல் (86ஆவது நிமிடம்): போட்டி முடிய இன்னும் 4 நிமிடங்களே இருந்த நிலையில், மீண்டும் அதிரடி காட்டிய கேன், பந்தை மிக உக்கிரமாக உதைத்து இங்கிலாந்தின் வெற்றி கோலை பதிவு செய்தார்.
பரபரப்பான மற்ற தருணங்கள்:
கொங்கோ அணியின் கோல் காப்பாளர்ர் லியனல் மபாசி, ஜூட் பெலிங்ஹாம் மற்றும் கேன் ஆகியோரின் அபாரமான கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார். அதேபோல், மார்கஸ் றஷ்ஃபோர்ட் அடிக்க முயன்ற கோலை ஆரோன் வான்-பிஸாக்கா மிகச்சிறப்பாக தடுத்தார். மறுமுனையில், கொங்கோ வீரர் யோவான் விஸா அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டுத் தெறித்ததால் கொங்கோ அணிக்குக் கிடைக்க வேண்டிய பொன்னான வாய்ப்பு நழுவியது.
அடுத்த சவால் என்ன?
அடுத்ததாக நடைபெறவுள்ள இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், மெக்சிகோ அணியை இங்கிலாந்து எதிர்கொள்ளவுள்ளது.

