நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, மீண்டும் இலங்கைக்கு வரும்போது கைது செய்யப்படலாம் என அஞ்சுவதால், தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்துள்ள எதிர்பார்ப்பு பிணை மனு, செவ்வாய்க்கிழமை (06) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கைது செய்யப்படாமல் பாதுகாப்பாக இலங்கைக்கு திரும்புவதற்கு அனுமதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி ஷிராந்தி ராஜபக்ஷ தாக்கல் செய்த எதிர்பார்ப்பு பிணை மனுவை பரிசீலித்த மாளிகாகந்த நீதவான் ஜனிதா பெரேரா, அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
‘ஷிராந்தி ராஜபக்ஷ’ சார்பில் சட்டத்தரணி ஜயபாலன் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தன்னை கைது செய்யாமல் இலங்கைக்கு பாதுகாப்பாகத் திரும்புவதற்கு அனுமதிக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் ஷிராந்தி ராஜபக்ஷ கோரியுள்ளார்.


