Last Updated:
பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரா சிறை உயரதிகாரியை சர்ச்சையில் சிக்க வைக்க, கைதிகள் போட்ட சதித்திட்டத்தின் பின்னணி என்ன?
பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், கைதிகள் செல்போன் பயன்படுத்தும் திடுக்கிடும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சிறை வார்டன்கள் மூன்று பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிறை உயரதிகாரியை சர்ச்சையில் சிக்க வைக்க, கைதிகள் போட்ட சதித்திட்டத்தின் பின்னணி என்ன?
தொடர் சர்ச்சைக்கு பெயர்போன பெங்களூரு அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு செல்போன்கள், டிவி என சொகுசு வசதிகளுடன் கூடிய சொகுசு வாழ்க்கை கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அக்ரஹாரா சிறைக்குள் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் விஐபி உபசரிப்பு ஆகியவற்றிற்கு எதிராக சிறைத்துறை தலைமை இயக்குநர் அலோக்குமார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வந்தார். எல்லைமீறும் கைதிகளை தனி செல்லில் அடைத்துச் சிறப்பாகக் கவனித்துள்ளார்.
இதனால் தங்களது சுதந்திரம் பறிபோனதாக அதிருப்தியடைந்த கைதிகள் சிலர் சில சர்ச்சை வீடியோக்களை இணையத்தில் கசிய விட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையை வலுவான சிக்கலில் சிக்க வைத்துள்ளனர். தண்டனை கைதிகளுக்கு இப்படியொரு வாழ்க்கையா? பெங்களூரு அக்ரஹாரா சிறைச்சாலைக்குள் என்னதான் நடக்கிறது? என பலரும் அதிர்ச்சி அடைந்தனர். கைதிகள் தண்டனை அனுபவிக்கச் சிறையில் அடைக்கப்பட்டார்களா? அல்லது சொகுசு வாழ்க்கை வாழ உள்ளே வந்தார்களா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர்.
இந்நிலையில், அக்ரஹாரா சிறை முழுக்க அதிகாரிகள் சல்லடை போட்டு ரைடு நடத்தினர். அதில் 9-ஆம் எண் சிறையில் பால் பாக்கெட்டுகளில் நேக்காக சுற்றப்பட்டு, வடிகால் குழாய்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் பல சிக்கின. மேலும், சர்ச்சை வீடியோவை வெளியிட்டதாக தர்ஷன், அபி மற்றும் ஆண்ட்ரூஸ் ஆகிய மூன்று கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விசாரணையின்போது, சிறை விதிகளைக் கடுமையாக்கியதற்காக அலோக் குமாரை சிக்க வைப்பதே தங்களின் நோக்கம் என்று அந்த மூவரும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பணியில் அலட்சியமாக இருந்ததற்காக சிவானந்தா, நிரஞ்சன் ஏ. காமத் மற்றும் ஹனுமந்தப்பா ஆகிய மூன்று வார்டன்களை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து டிஜிபி அலோக்குமார் உத்தரவிட்டார்.
மேலும், உயர் பாதுகாப்பு சிறைகளுக்குள் கைபேசிகள் எவ்வாறு ஊடுருவின என்பதை விளக்கி ஒரு முறையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சிறை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை தொடர்வதால், குற்றம் சாட்டப்பட்ட மூன்று கைதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அரங்கேறிய இச்சம்பவம் பெங்களூரு முழுக்க சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Bangalore,Karnataka


