சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த 13 ஆண்டுகளாக அந்நாட்டை வழிநடத்தி வருகிற நிலையில், அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தனது அதிகாரங்களை பிறருடன் பகிர்ந்து கொடுக்க தொடங்கியிருப்பது, அவர் விரைவில் ஓய்வு பெற போகிறாரா என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஜூன் 30 ஆம் திகதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு (பொலிட் பீரோ) கூட்டம் நடைபெற்றது.
இதில் ஜி ஜின்பிங் நேரடியாக தலைமையேற்றதுடன், கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்புகள், பொறுப்புகள், மற்றும் செயல்பாடுகள் குறித்த புதிய விதிமுறைகள் பற்றி மறு ஆய்வு நடைபெற்றது.
ஜி ஜின்பிங் முடிவு
இந்த கூட்டம், அதிகார பரவலுக்கான முதல் படியாக பார்க்கப்படுகிறது. மாவோவுக்குப் பிறகு மிகுந்த அதிகாரம் பெற்ற தலைவராக அறியப்படும் ஜி ஜின்பிங், தற்போது தனது அதிகாரங்களை பிறருடன் பகிர்ந்து கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார் என்பது செய்தி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சர்வதேச ஊடகங்களின் கூற்றுப்படி, இது ஜி ஜின்பிங் ஓய்வு பெறும் செயல்முறையின் தொடக்கமாக இருக்கலாம். இருப்பினும், தற்போது வரை ஜி ஜின்பிங் ஓய்வு குறித்து எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஆசியாவின் வளர்ச்சி
இந்த நிலையில், சீனா, தற்போது ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் புத்திசாலித்தனமான நாடாக கருதப்படுவதுடன், மேற்கு நாடுகளுக்கு இணையாக ஆசியாவின் வளர்ச்சியை அதிகரிக்க பிரிக்ஸ் கூட்டமைப்பின் மூலம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, சீனாவுடன் வர்த்தக உறவில் இருக்கும் நாடுகளும் ஒரே நேரத்தில் வளர்ச்சி பாதையில் செல்வதோடு, டொலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கத்திலும், பிரிக்ஸ் கரன்சி உருவாக்குவதிலும் சீனா முன்னிலை வகிக்கிறது.
இந்த சூழலில், ஜி ஜின்பிங் ஓய்வு பெறப்போகிறார் என்கிற தகவல்கள், சீனாவின் நட்பு நாடுகளில் சற்று சோர்வை ஏற்படுத்தியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |