ஏமன் நாட்டில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். 2011-ஆம் ஆண்டு டோமி தாமஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு குழந்தை பிறந்ததும் குடும்பத்துடன் ஏமனில் செட்டில் ஆகியுள்ளார். நாளடைவில் போதிய வருவாய் இல்லாததால், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக கிளினிக் ஆரம்பித்தார். 2015 ஆம் ஆண்டு கிளினிக் தொடங்கிய பின், கேரளா வந்த நிமிஷா பிரியாவுடன் மஹ்தியும் உடன் வந்துள்ளார்.
இதையடுத்து தனியாக ஏமன் சென்ற செவிலி நிமிஷா பிரியாவிடம் இருந்து, முழுமையாக கிளினிக்கை அபகரிக்க மஹ்தி முற்பட்டுள்ளார். அதற்கு நிமிஷா பிரியா மறுப்பு தெரிவித்ததும், அவரை துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. கேரளா வந்தபோது நிமிஷா பிரியாவுடன் எடுத்த போட்டோவை காட்டி, அவர் தனது மனைவி என்று கூறி ஏமன் அதிகாரிகளை மஹ்தி நம்ப வைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாஸ்போர்ட்டை தராமல் மிரட்டிய மஹ்திக்கு, மயக்க ஊசி செலுத்தி அதை மீட்க கேரள செவிலி திட்டமிட்டுள்ளார். மயக்க மருந்து அதிக அளவில் உடலில் செலுத்தப்பட்டதால் மஹ்தி உயிரிழந்ததாக கூறப்பட்டது. கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டை சேர்ந்தவரை கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ளார். அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நாளை (16ம் தேதி) அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நிமிஷாவின் குடும்பத்தினர் சார்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில் இருந்துவருகிறது. மறுபுறம், சன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் மூலம், அங்குள்ள பிரபல சூஃபி மதகுருவான ஷேக் ஹபீப் உமர் மூலம் உயிரிழந்த மஹ்தி குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக, கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தற்போதைக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் நிமிஷாவின் மரண தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பதாக இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் அலுவலகத்தை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தகவல் வெளியிட்டுள்ளது. ஏமன் நாட்டின் உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் மரண தண்டனையை ரத்து செய்வது என அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் நடந்தது.
July 29, 2025 7:06 AM IST
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ‘ரத்து’..! – ஏமன் அரசு மனமாற்றம்.. எப்படி சாத்தியமானது?