திருவனந்தபுரம்: கடந்த ஜூன் 14-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் கடற்படை போர் விமானமான எஃப்- 35பி பழுதுபார்க்க முடியாத நிலையில் இருப்பதால், அந்த விமானத்தின் பாகங்களை தனித்தனியாக பிரித்து இங்கிலாந்துக்கு எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 14ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் எஃப்- 35பி ஸ்டெல்த் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எனவே அந்த போர் விமானத்தை தனித்தனியாக பிரித்து, ராணுவ சரக்கு விமானம் மூலமாக இங்கிலாந்துக்கு மீண்டும் கொண்டு சென்று பழுது நீக்க திட்டமிடப்பட்டது.
இந்த போர் விமானத்தை பழுது நீக்குவதற்காக ஜூலை 2-ம் தேதி இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு கேரளா வர திட்டமிடப்பட்டது, ஆனால் அவர்களின் வருகை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து நாளை (ஜூலை 5) 40 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்து பொறியாளர்கள் குழு சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் வரவுள்ளது.
எப்படி கொண்டுச்செல்லப்படும் இந்த போர் விமானம்? – பழுது நீக்குவதற்காக பிரிக்கப்படும் எஃப்-35பி போர்விமானத்தை கொண்டு செல்ல சி-17 குளோப்மாஸ்டர் III விமானம் பயன்படுத்தப்படுகிறது. குளோப்மாஸ்டர் என்பது இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படும் ஆற்றல் வாய்ந்த கனரக சரக்கு விமானமாகும். இது சுமார் 77 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டது.
ஆனால், எஃப்-35பி விமானம் 14 மீட்டர் நீளம் கொண்டது, அதன் இறக்கைகள் சுமார் 11 மீட்டர் நீளம் கொண்டவை. எனவே இந்த போர் விமானத்தை முழுமையாக குளோப்மாஸ்டரில் ஏற்ற முடியாது. இதனால் எஃப்-35 பி விமானத்தின் இறக்கைகளை பிரித்து குளோப்மாஸ்டர் மூலமாக கொண்டுசெல்லவுள்ளனர். இதற்காக போர் விமானத்தை பிரித்து, பொருத்துவதில் நிபுணத்துவம் பெற்ற பொறியாளர் குழு திருவனந்தபுரம் வரவுள்ளது.