Last Updated:
கேரளா ஆலப்புழா, கோட்டயம் பறவை காய்ச்சல் பரவல் காரணமாக தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு, சோதனை, கிருமி நாசினி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கேரளா மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல கோழிகள் திடீரென உயிரிழந்ததால் அதன் ரத்த மாதிரியை சேகரித்து புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு கால்நடைத்துறையினர் அனுப்பி வைத்தனர்.
அதை பரிசோதித்ததில் உயிரிழந்த பறவைகளுக்கு, எச்1, என்1 பறவை காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்து கிருமி நாசினிகள் தெளிக்க தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் கோவை, நீலகிரி, தேனி , கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை கண்காணிக்க உத்தரவிட்டுள்ள பொது சுகாதாரத்துறை, சபரிமலை சென்று திரும்பும் பக்தர்கள், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மருத்துவர்களை அணுகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாமக்கல் உள்ளிட்ட கோழி பண்ணைகள் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் கால்நடை மருத்துவர்களோடு இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
Dec 25, 2025 12:40 PM IST


