Last Updated:
கேரள மாநிலம் கோட்டயத்தில் நர்சிங் கல்லூரி ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கண்ணூரில் 11ம் வகுப்பு மாணவர் ராகிங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், கோட்டயம், பகுதியில் நர்சிங் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் சேர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களை கொடூரமான முறையில் ராகிங் செய்த விவகாரம் வெளிவந்த ஓரிரு தினங்களில், பள்ளி மாணவர் ஒருவர் ராகிங் மூலம் கடுமையாக தாக்கப்பட்டிருக்கும் விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கோட்டயம், காந்திநகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நர்சிங் கல்லூரியில் ஐந்து சீனியர் மாணவர்கள், ராகிங் எனும் பெயரில் சீனியர் மாணவர்கள் 5 பேர் முதலாமாண்டு மாணவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து வார்த்தைகளால் சொல்ல முடியாத பல்வேறு கொடுமைகளை செய்துள்ளனர். விரல் நகங்களுக்கு இடையே ஊசியால் குத்தி அலற விட்டுவது, காம்பஸால் பின்புறத்தில் குத்தி ரசிப்பது, மாணவர்களை கட்டிலில் நிர்வாணமாக கட்டி வைத்து அவர்களது காயங்களில் தோல் சுருக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிச்சல் மிகுந்த லோஷன்களை தடவி விட்டு, அதனால் மாணவர்கள் எரிச்சல் தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டதை கண்டு ரசித்துப்பது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டுள்ளனர். சில மாணவர்களுக்கு வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து போதையில் தள்ளாட வைத்துள்ளனர். மாணவர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதை வீடியோ எடுத்து பணம் கேட்டும் மிரட்டியிருக்கின்றனர்.
சீனியர் மாணவர்களின் இந்த ராகிங் கொடுமை சுமார் 4 மாதங்களுக்கு தொடர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் துணிந்து கல்லூரியின் ராகிங் எதிர்ப்புக் குழுவிடம் தகவல் தெரிவிக்க ரகசியமாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சில செல்போன் வீடியோக்கள் மற்றும் காயங்களை வைத்து ராகிங் நடைபெற்றிருப்பதை உறுதி செய்தனர் அந்த குழுவினர்.
இதையும் படியுங்கள் : சட்டவிரோத குடியேற்றம்; “ஏன் குஜராத்தில் இடம் இல்லையா?” – அமிர்தசரஸில் தரையிறங்கும் அமெரிக்க விமானம் குறித்து பஞ்சாப் அமைச்சர் கேள்வி
உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த கோட்டயம் போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்து குறிப்பிட்ட அந்த 5 சீனியர் மாணவர்களை கைது செய்தனர். கோட்டயத்தை சேர்ந்த சாமுவேல், விவேக், வயநாட்டை சேர்ந்த ஜீவா, மலப்புரத்தை சேர்ந்த ரிஜில்ஜித், ராகுல்ராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் இயங்கிவரும் கொளவலூர் பி.ஆர். நினைவு பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர் ராகிங் கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர் ஒருவர், தனது சீனியர் மாணவர்கள் ஐந்து பேர் இணைந்து தன்னை ராகிங் செய்ததாகவும், பிறகு ஐந்து பேரும் இணைந்து தன்னை கடுமையாக தாக்கியதில் தனது கை முறிந்துள்ளதாகவும் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை அடுத்து காவல்துறையினர், அந்த ஐந்து சீனியர் மாணவர்கள் மீது பாரத நியாய சம்ஹிதாவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவரை தலச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
February 14, 2025 8:00 PM IST