Last Updated:
சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய வர்த்தகத் தூதரகம் ஆகியவை கேப்டன் ஸ்மித்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன.
180 விமான பயணிகளை காப்பாற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த விமானி ஸ்மித் மச்சாரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி போனில் பேசி இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவீவ் நகருக்குச் சென்ற ஃப்ளைதுபாய் (Flydubai – FZ1073) விமானத்தில் நடுவானில் திடீரென ஏற்பட்ட அவசரநிலையின் போது, மிகச் சிறந்த மனஉறுதியுடனும் துணிச்சலுடனும் செயல்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட் கேப்டன் ஸ்மித் மச்சாரின் (Captain Smit Machchhar) குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சாரின் மனைவி சோனல், தந்தை பூபேந்திர பாய் மற்றும் தாயார் கீதா பென் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, கேப்டன் ஸ்மித்தின் அசாதாரண வீரத்தையும் மனதிடத்தையும் வெகுவாகப் பாராட்டினார். “கேப்டன் ஸ்மித்தின் துணிச்சல் மற்றும் சமயோசித புத்தி கூர்மையால் ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நாடும் உலகமும் அவரது வீரத்தைக் கண்டு பெருமிதம் கொள்கிறது,” என்று பிரதமர் கூறினார். மேலும், அவருடைய விரைவான குணமடைதலுக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
ஃப்ளைதுபாய் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, காக்பிட்டில் விமானிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சக உதவி விமானி, கேப்டன் ஸ்மித் மச்சார் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நிலையிலும் தளராத கேப்டன் ஸ்மித், காக்பிட் கதவைத் திறந்து உடனடியாக சிக்னல் கொடுத்தார். இதனால் விமானத்தின் ஏனைய பணியாளர்கள் மற்றும் பயணிகள் காக்பிட் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்த முடிந்தது.
இதனைத் தொடர்ந்து விமானம் சவூதி அரேபியாவின் தபுக் நகரில் உடனடியாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் ஸ்மித்தின் இந்த சாதனையைக் குறிப்பிட்டுப் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்த இந்தியப் பைலட்டின் சாதுரியமான செயலால் 9/11 போன்றதொரு மாபெரும் விமானப் பேரழிவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது” எனக் புகழாரம் சூட்டியிருந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அவரது இந்த வீரச் செயலைப் பாராட்டியுள்ளார்.
சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய வர்த்தகத் தூதரகம் ஆகியவை கேப்டன் ஸ்மித்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. மேலும், இச்சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் செல்லும் தனது அனைத்து விமான சேவைகளையும் ஃப்ளைதுபாய் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விசாரணை நடத்தி வருகிறது.


