கோலாலம்பூர்:
டெலிகோம் மலேசியாவிற்கு (Telekom Malaysia) சொந்தமான கேபிள்களை திருடியதை ஒப்புக்கொண்ட இரண்டு நபர்களுக்கு பாரிட் மாவட்ட நீதிமன்றம் தலா 3,000 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முகமட் ஹலிம் ஹுசின் மற்றும் முகமட் சொலிஹின் தாஜுடின் ஆகிய இருவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மஜிஸ்திரேட் நூருல் இசாலினா ராஜாய் இந்த அபராதத்தை விதித்தார். மேலும் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 12 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 30, 2026 அன்று, பேராக் மத்திய மாவட்டத்தில் உள்ள இரு வேறு இடங்களில் டெலிகோம் நிறுவனத்திற்குச் சொந்தமான இரு கருப்பு நிற கேபிள் சுருள்களை இவர்கள் திருடியுள்ளனர்.
செப்டம்பர் 30 அன்று பாரிட் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கேபிள் சுருள்கள், இரும்பு வெட்டி, கொக்கி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட புரோட்டான் சாகா கார் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.
முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் இருவருக்கும் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது மலேசிய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



