Last Updated:
சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட், கெட்டுப்போன உணவுக்காக கேண்டீன் உரிமையாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள எம்.எல்.ஏ. விடுதி கேண்டீனில் தனக்கு கெட்டுப்போன உணவை கொடுத்ததாக ஊழியரை எம்.எல்.ஏ. ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்கியுள்ளனர். இதில், ஷிண்டே ஆதரவு சிவசேனா கட்சியை சேர்ந்த பல்தானா தொகுதி எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட்டும் எம்.எல்.ஏ.க்களுக்கான விடுதியில் தங்கி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு அவர் எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள கேண்டீனில் இரவு உணவை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு சப்பாத்தி, பருப்பு குழம்பு அடங்கிய உணவு வழங்கப்பட்டுள்ளது. இதில், பருப்பு குழம்பு கெட்டுப்போகியுள்ளது. இதனை அறிந்ததும், அவர் நேராக விடுதியின் வரவேற்பு அறைக்கு வந்து கேண்டீன் உரிமையாளரை அங்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர், வரவேற்பு அறையில் இருந்த நபர் கேண்டீன் உரிமையாளரை அங்கு வரவழைத்துள்ளார். அவரிடம் அந்த குழம்பைக் கொடுத்து இப்படித்தான் கெட்டுப்போன உணவை கொடுப்பீர்களா என கேட்டு, அவரது முகத்திலேயே அறைந்தும், குத்தியும் உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள கேண்டீனில் தனக்கு தொடர்ந்து கெட்டுப்போன உணவுகளை தருவதாக கூறி, அவர் கேண்டீன் ஊழியரை கன்னத்தில் அறைந்தார்.
இது தொடர்பாக பேசிய எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட், “பல முறை புகார் அளித்தும் கெட்டுப்போன உணவே மீண்டும் வழங்கப்பட்டது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. உணவின் தரம் மிக மோசமான நிலையில் இருந்தது. நான் அவரை மீண்டும் அடிப்பேன், எனக்கு எந்த வருத்தமும் இல்லை” எனத் தெரிவித்தார். இது பெரும் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில், சிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் மீதான தாக்குதல் சம்பவத்தை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கண்டித்துள்ளார். இதுபோன்ற நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் யாருக்கும் மரியாதைக்குரியது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு எம்.எல்.ஏ.வாக கெய்க்வாட்டின் நடவடிக்கைகள் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் ஃபட்னாவிஸ், மக்கள் பிரதிநிதிகளிடையே பொறுப்புக்கூறலின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட், கடந்த ஆண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுத்துக்கொண்டு வருபவர்களுக்கு 11 லட்சம் ரூபாய் தருவேன் என அறிவித்து சர்ச்சையில் சிக்கியவர் என்பதும், அது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
July 09, 2025 3:24 PM IST
கேண்டீன் உரிமையாளரின் கன்னத்தில் அறைந்த சிவசேனா எம்.எல்.ஏ.! சட்டமன்றத்தில் ஃபட்னாவிஸ் விடுத்த எச்சரிக்கை