கோலாலம்பூர், ஏப்ரல் 13:
இன்று காலை கோலாலம்பூர், கெலானா ஜெயா எல்ஆர்டி (LRT) வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்ட ரயில் சேவை, தற்போது முழுமையாகச் சீரமைக்கப்பட்டு மீண்டும் வழக்கம் போல் இயங்கி வருகிறது.
இன்று அதிகாலை சுமார் 5:57 மணியளவில், ‘யுனிவர்சிட்டி’ (Universiti) நிலையத்தில் தண்டவாள மாறுதல் அமைப்பில் (track switch fault) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பலரது காலை நேரப் பயணம் தாமதமானது.
தகவல் அறிந்ததும், ரேபிட் ரெயில் (Rapid Rail) நிறுவனத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சரிசெய்யும் பணிகளைத் தொடங்கினர். தீவிரமான சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, காலை 7:10 மணியளவில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பாகங்கள் பாதுகாப்புத் தரங்களுடன் இயங்குகிறதா என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காலை 7:21 மணி முதல் ரயில் சேவை முழுமையாகச் சீரானது.
பயணிகள் பயணத்தின் போது எந்தத் தடங்கலும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, நாள் முழுவதும் பொறியியல் மற்றும் செயல்பாட்டுக் குழுவினர் ரயில் இயக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
பயணிகளின் கூட்டத்தை நெறிப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் கூடுதல் துணை ராணுவப் படையினரும் (Auxiliary Police), நிலையப் பணியாளர்களும் பிளாட்பாரங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பயணிகளுக்கு ஏற்பட்ட இந்தச் சிரமத்திற்கு ரேபிட் ரெயில் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் எல்ஆர்டி சேவையின் தற்போதைய நிலையைத் தெரிந்துகொள்ள, அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




