கோலாலம்பூர்,:
தாமான் புசாட் கெப்போங்கில் உள்ள லாட்டரி கடையில் பணியாற்றி வந்த 62 வயது மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைக்கப்பட்ட கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 9 அன்று காலை 8 மணியளவில், லாட்டரி விற்பனைப் பிரிவின் கவுண்டரில் நின்று கொண்டிருந்த 62 வயதுப் பெண் ஊழியர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் போன்ற திரவத்தை ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றார்.
இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபரைத் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலிசார் கைது செய்துள்ளதாகச் செந்தூல் மாவட்டப் பதில் போலிஸ் தலைவர் துணை ஆணையர் ஜாஸ்னி ஜோல்பா உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து விரிவான தகவல்களைப் பகிர இன்று போலிஸ் தரப்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
இந்த கொடூரத் தாக்குதலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்களுக்கு உள்ளான அந்த மூதாட்டி, ஆபத்தான நிலையில் கோலாலம்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு யாருடனும் எந்தப் பகையோ அல்லது முன்னதாக எந்த மிரட்டல்களோ வரவில்லை எனத் தெரியவந்துள்ள நிலையில், தாக்குதலுக்கான மூலக்காரணம் குறித்துப் போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



