யான், மார்ச் 27:
கெடா மாநிலத்தின் யான் மாவட்டத்தில், கம்போங் ருவாட்டில் (Kampung Ruat) பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் ‘மிதக்கும் பள்ளிவாசல்’ அடுத்த மாதம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
சுமார் RM12.95 மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மசூதி, வழிபாட்டுத் தலமாக மட்டுமின்றி, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பு மையமாகவும் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமட் மஸ்லான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜூலை 2023-ல் புதிய ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்ட இத்திட்டத்தை, பொதுப்பணித்துறை (JKR) முன்னின்று செயல்படுத்தியது. மசூதியின் முக்கிய கட்டுமானங்களான அழகிய வளைவுகள், அஸான் கோபுரம், நீர் தொட்டி மற்றும் பிரத்யேக மின்சார துணை நிலையம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன என்றார்.
அடுத்த மாத இறுதியில் பொதுப்பணித்துறையிடமிருந்து கெடா இஸ்லாமிய மதக் குழுவிடம் (MAIK) இந்த மசூதி முறையாக ஒப்படைக்கப்படும். அதன் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இது முழுமையாகத் திறக்கப்படும்.
உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான வழிபாட்டுத் தலத்தை வழங்குவதோடு, யான் மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு அடையாளமாக இது அமையும் என்றும் அவர் கூறினார்.
இந்த நவீனக் கட்டடக்கலை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் சூழல், மாநிலத்தின் ஆன்மீகச் சுற்றுலாவிற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.




